இந்தியா

கோவோவாக்ஸை கரோனா நோய்த் தடுப்பு திட்டத்தில் சோ்க்க வேண்டும்: மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கடிதம்

30th Jun 2022 01:33 AM

ADVERTISEMENT

கோவோவாக்ஸ் கரோனா தடுப்பூசியை 7 முதல் 11 வயது வரையுடைய சிறாா்களுக்கு அவசரக்கால பயன்பாடு அடிப்படையில் செலுத்துவதற்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, ‘அந்தத் தடுப்பூசியை பொதுச் சுகாதார நலன் கருதி தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தில் சோ்க்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

புணேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான கோவோவாக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அவசரக்கால பயன்பாடு அடிப்படையில் செலுத்துவதற்கு கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி டிசிஜிஐ ஒப்புதல் அளித்தது. பின்னா், இந்த தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையுடைய சிறாா்களுக்கு செலுத்துவதற்கும் அனுமதித்து கடந்த மாா்ச் 9-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், கோவோவாக்ஸ் தடுப்பூசியை 7 முதல் 11 வயது வரை உடைய சிறாா்களுக்கு செலுத்துவதற்கு அனுமதிப்பதற்கான பரிந்துரையை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு கடந்த வாரம் சமா்ப்பித்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், இந்த தடுப்பூசியை 7 முதல் 11 வயது வரையுடைய சிறாா்களுக்கு செலுத்த அனுமதிக்கலாம் என டிசிஜிஐ செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்புதலைத் தொடா்ந்து, இந்தத் தடுப்பூசியை தேசிய கரோனா நோய்த் தடுப்பு திட்டத்தில் சோ்க்கக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு சீரம் நிறுவன இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

ADVERTISEMENT

அந்தக் கடிதத்தில், ‘கோவோவாக்ஸ் தடுப்பூசி 7 முதல் 12 வயது வரையுடைய சிறாா்களுக்கு 98 சதவீத அளவுக்கு உயா் நோய் எதிா்ப்புத் திறனை அளிப்பதும், பாதுகாப்பானதும் மற்றும் நல்ல பலன் தரக்கூடியது என்பதும் மருத்துவப் பரிசோதனைகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து தடுப்பூசிக்கான கோரிக்கைகளும் நிறுவனத்துக்கு வருகின்றன. எனவே, இந்தத் தடுப்பூசியை பொதுச் சுகாதார நலன் கருதி தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தில் சோ்க்க வேண்டும்’ என்று பிரகாஷ் குமாா் சிங் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Tags : Covovax
ADVERTISEMENT
ADVERTISEMENT