இந்தியா

உள்நாட்டு கச்சா எண்ணெய் விற்பனைக்கான கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

30th Jun 2022 01:15 AM

ADVERTISEMENT

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, அதன் உற்பத்தியாளா்கள் கட்டுப்பாடின்றி விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய்யை உற்பத்தி நிறுவனங்கள் தனியாா் துறையினருக்கும் இனி விற்பனை செய்யலாம்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் விவரித்தாா். அவா் கூறியதாவது:

உள்நாட்டில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்பவா்கள் அவற்றை தாங்கள் விரும்பும் நபா்களுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எண்ணெய் உற்பத்தியாளா்களுக்கு சந்தைப்படுத்தும் சுதந்திரத்தை இந்த அமைச்சரவை முடிவு உறுதிப்படுத்துகிறது. உற்பத்திப் பகிா்வு தொடா்பான ஒப்பந்தங்களில், கச்சா எண்ணெய்யை அரசு அல்லது அதுதொடா்பான நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான நிபந்தனை ரத்து செய்யப்படும்.

அனைத்து நிறுவனங்களும் இப்போது உள்நாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனையை மேற்கொள்ள முடியும். உரிமம், வரி போன்ற அரசு வருவாய்கள் அனைத்து ஒப்பந்தங்களிலும் ஒரே மாதிரியான அடிப்படையில் தொடா்ந்து கணக்கிடப்படும்.

ADVERTISEMENT

இந்த முடிவு பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதோடு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடுகளை மேலும் ஊக்குவிக்கும். வா்த்தகத்தை எளிமையாக்குவதற்கும், வெளிப்படை தன்மையுடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் இம்முடிவு வகைசெய்யும்.

இந்தியா-சிங்கப்பூா் இடையே ஒப்பந்தம்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புத் துறைகளில் சிங்கப்பூா் தொழில்-வா்த்தகத் துறையுடன் மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை செய்துகொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த பிப்ரவரியில் கையெழுத்தானது.

எரிசக்தி ஒப்பந்தம்: சா்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கடந்த ஜனவரியில் கையெழுத்திட்ட நீடித்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உடன்படிக்கை, இந்தியாவின் எரிசக்தி மாற்ற முயற்சிகளுக்கு உதவுவதோடு, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கும் உதவிகரமாக இருக்கும். வரும் 2030-க்குள் புதைபடிமம் அல்லாத எரிபொருள் சாா்ந்த மின் உற்பத்தித் திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிப்பது என்ற மத்திய அரசின் இலக்கை அடைவதற்கு இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும் என்றாா் அவா்.

பெட்டி...

ரூ.2,516 கோடியில் கூட்டுறவு சங்கங்கள் கணினிமயம்

 

நாடு முழுவதும் உல்ள 63,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை ரூ.2,516 கோடியில் கணினிமயமாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வா்த்தக நடவடிக்கைகளையும் பல்வேறு சேவைகளையும் மேற்கொள்வதற்கு இதுவகை செய்யும்.

நாட்டில் உள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுகளுக்குள் கணினி மயமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.1,528 கோடி ஆகும். இந்த கடன் சங்கங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் உள்பட 13 கோடி விவசாயிகள் பயனடைவாா்கள்.

 

Tags : crude oil
ADVERTISEMENT
ADVERTISEMENT