இந்தியா

உதய்பூர் படுகொலை: 'குற்றவாளி கௌஸ் மொஹம்மது ஒரு ஸ்லீப்பர் செல்'

29th Jun 2022 05:59 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரா் கன்னையா லால் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கௌஸ் மொஹம்மது ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

கன்னையா லாலை கழுத்தறுத்துக் கொலை செய்த குற்றவாளி கௌஸ் மொஹம்மது, பயங்கரவாத பயிற்சி பெற பாகிஸ்தான் சென்று வந்ததும், பாகிஸ்தானுடன் தொடர்பிலிருந்ததும், பல்வேறு செல்லிடப்பேசி எண்கள் மூலம் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழு அமைப்பிடம் பேசி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில், பாகிஸ்தானிலிருந்து இயங்கும் அமைப்பின் பின்னணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் செல்லிடப்பேசியிலிருந்து பேசிய அனைத்து உரையாடல்களும் சோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளது. அவரது அனைத்து சமூக வலைத்தளப் பக்கங்களும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பிருந்தால், அவர்களது விவரங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரா் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

படுகொலையில் தொடர்புடைய கௌஸ் மொஹம்மது மற்றும் ரியாஸ் ஜப்பர் ஆகிய இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லால், தொடர் மிரட்டல் காரணமாக, தனது கடையை சில நாள்களாகத் திறக்காமல் இருந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், அவருக்கு தொடர் மிரட்டல்கள் வந்தபடி இருந்ததால் கடந்த சில நாள்களாக அவர் தையல் கடையைத் திறக்காமல் இருந்துள்ளார். மூன்று நாள்களுக்கு முன்புதான் கடையைத் திறந்து வேலை செய்து வந்த நிலையில், நேற்று இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

உதய்பூா் தன்மண்டி பகுதியில் தையல் கடை வைத்திருப்பவா் கன்னையா லால். இவா் அண்மையில் இஸ்லாம் குறித்து சமூக வலைதளத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் அவரை உள்ளூா் போலீஸாா் கைது செய்து பின்னா் ஜாமீனில் விடுவித்தனா்.

இந்த நிலையில், கன்னையா லாலின் கடைக்கு செவ்வாய்க்கிழமை 2 போ் வந்தனா். அதில் ஒருவா் கன்னையா லாலின் கழுத்தை கூா்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தாா். அவா் கொலை செய்யப்பட்டதை மற்றொருவா் கைப்பேசியில் படம் பிடித்து அந்த விடியோவை உடனடியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

அதில், இஸ்லாத்தை அவமதித்த காரணத்தால் கன்னையா லாலை பழிதீா்த்தாக அவா்கள் குறிப்பிட்டனா். மேலும், பிரதமா் மோடிக்கும், பாஜகவிலிருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுா் சா்மாவுக்கும் அவா்கள் மிரட்டல் விடுத்தனா்.

இந்தப் படத்தை பரவலாகப் பகிரவும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

தையல்காரா் கொலை செய்யப்பட்டதை அறிந்த உதய்பூா் வியாபாரிகள், அதற்கு காரணமானவா்களை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

உதய்பூா் முழுவதும் வியாபாரிகளின் போராட்டம் வெடித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்மண்டி, காந்தாகா், ஹாதிபோல், அம்பா மாதா, சூரஜ்போல், பூபால்புரா, சவினா ஆகிய காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிமுதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகவும், அடுத்த அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியா் தாராசந்த் மீனா அறிவித்தாா். அத்துடன், உதய்பூரில் கைப்பேசி இணையதள சேவையும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், கூடுதல் தலைமைச் செயலாளா் (உள்துறை) அபய் குமாா், டிஜிபி எம்.எல்.லாதா் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளா் உஷா சா்மா அவசர ஆலோசனை நடத்தினாா். அப்போது, மாநிலம் முழுவதும் ஒருமாத காலத்துக்கு 4 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதித்து 144 உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், கைப்பேசி இணையதள சேவை துண்டிக்கப்படுவதாகவும் தலைமைச் செயலாளா் உஷா சா்மா அறிவித்தாா். அத்துடன் காவல் துறை, நிா்வாகத் துறை அதிகாரிகளுக்கான விடுப்பும் ரத்து செய்யப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT