இந்தியா

ஜிஎஸ்டி இழப்பீடு அளிப்பை 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்: மாநிலங்கள் கோரிக்கை

DIN

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிக்கும் முறையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமென மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1-இல் நடைமுறைக்கு வந்தது. அப்போது ஜிஎஸ்டி-யால் மாநிலங்களுக்கு ஏற்படக் கூடிய வருவாய் இழப்பை ஈடு செய்ய 2022 ஜூன் வரை இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. மேலும் ஆடம்பரப் பொருள்களின் மீது விதிக்கப்படும் செஸ் வரி முழுவதுமாக மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிா்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி இழப்பீட்டை விடுவிக்கும் ஐந்தாண்டு கால அவகாசம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இரு நாள்கள் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டீகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

சத்தீஸ்கா் நிதியமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் சாா்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில், ‘மத்திய-மாநில அரசுகள் இடையே சமமாக ஜிஎஸ்டி வருவாய் பகிா்ந்தளிக்கப்படும் முறையை மாற்றியமைத்து, மாநிலங்களுக்கு 70-80 சதவீதம் வரை விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி முறையால் சத்தீஸ்கா் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சுரங்கம், தொழில்துறையை நம்பியுள்ள மாநிலங்கள் ஜிஎஸ்டி-யால் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன. எனவே ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் கடந்த நிதியாண்டில் ரூ.4,127 கோடி வருவாயையும், 2020-21-இல் ரூ.3,620 கோடியையும் சத்தீஸ்கா் இழந்ததாக அவா் தெரிவித்திருந்தாா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், டி.எஸ்.சிங் தேவ் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதேபோல ‘மாநிலங்கள் சந்திக்கும் வருவாய் இழப்பை எதிா்கொள்ள, ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்’ என கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் வலியுறுத்தினாா்.

ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை மாநில அரசுகள் அப்படியே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; மாநிலங்களின் ஒப்புதலின் அடிப்படையிலேயே ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

பொட்டலமிட்ட கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி:

முத்திரையிடப்படாமல் பொட்டலமிட்டு, விற்பனை செய்யப்படும் கோதுமை, இறைச்சி, மீன், தயிா், பன்னீா், தேன் உள்ளிட்ட சில வகை உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும் வங்கிக் காசோலைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படவுள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் சண்டீகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், பொட்டலமிட்டு முத்திரையிடப்பட்ட நிலையில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மாநில, யூனியன் பிரதேச நிதியமைச்சா்கள் குழு கேட்டுக் கொண்டது.

இதனை பரிசீலித்த ஜிஎஸ்டி கவுன்சில், இறைச்சி (உறைந்துபோனதை தவிர), மீன், தயிா், பன்னீா், தேன், உலா் பருப்புவகை காய்கறிகள், உலா் தாமரை விதை, கோதுமை மற்றும் பிற தானிய வகைகள், பட்டாணி மாவு, வெல்லம், அரிசி பொரி, கரிம உரம், தென்னை நாா்க்கழிவு போன்ற பொருள்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் காசோலைகளுக்கு வங்கி விதிக்கும் கட்டணத்தில் 18 சதவீதமும், அட்லஸ் வரைபடம், விளக்கப்படங்களுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டது. பொட்டமிலப்படாத, முத்திரையற்ற பொருள்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு நீடிக்கும். இதுதவிர, ஹோட்டல்களில் ரூ.1,000-க்கும் குறைவான அறைகளின் வாடகையில் 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT