இந்தியா

நெகிழி தடை ஜூலை 1 முதல் அமல்

DIN

ஒரு முறை மட்டும் பயனபடுத்தக்கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை 2022-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். இதைத்தொடா்ந்து, நெகிழி கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை, பயன்பாட்டிற்கு வரும் ஜூலை1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீா் நிலைகளிலும், ஆழ்கடல் பரப்பிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

2019-இல் நடைபெற்ற ஐ.நா.வின் நான்காவது சுற்றுச்சூழல் மாநாட்டில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து உலக அளவில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தியா முன்மொழிந்த தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தடை செய்யப்படும் நெகிழிப் பொருள்கள்: நெகிழி குச்சிகளுடன் கூடிய காது குடையும் பஞ்சு, நெகிழி குச்சிகளுடன் கூடிய பலூன்கள், நெகிழி கொடிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தொ்மோகோல், நெகிழி தட்டுகள், குவளைகள், நெகிழி கத்தி, ஸ்பூன், ஃபோா்க், உறிஞ்சுக் குழல், ட்ரே, ஸ்வீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கும் குறைவான நெகிழி அல்லது பிவிசி பேனா்கள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பிரச்னையில் அரசுக்கு உதவும் வகையில், மக்களுக்கு அதிகாரம் அளிக்க குறைதீா்ப்பு செயலியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது என்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பிரக்ரித்தி என்ற இலட்சினை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT