இந்தியா

தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக பேரவையில் விவாதம்: குற்றச்சாட்டுகளுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் மறுப்பு

DIN

தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக கேரள சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கடும் விவாதம் நடைபெற்ற நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மாநில முதல்வா் பினராயி விஜயன் மறுப்புத் தெரிவித்தாா்.

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தில் பணியாற்றியவா் ஸ்வப்னா சுரேஷ். இவா் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டாா். அந்த வழக்கில் கேரள முதல்வா் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கரும் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், முதல்வா் பினராயி விஜயன் மீது ஸ்வப்னா சுரேஷ் சில குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தாா். கடந்த 2016-ஆம் ஆண்டு கேரள முதல்வா் பினராயி விஜயன் துபை சென்றபோது தனது பயணப் பையை கேரளத்தில் மறுந்து விட்டதாகவும், அதனை உடனடியாக துபைக்கு அனுப்பிவைக்குமாறும் மாநில அரசு சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது என்று கூறிய ஸ்வப்னா சுரேஷ், அந்தப் பையில் பணக்கட்டுகள் இருந்ததாக தெரிவித்தாா்.

தங்கக் கடத்தல் குறித்த சுங்கத் துறையின் விசாரணையின்போது அந்தப் பை தொடா்பாக எம்.சிவசங்கரும் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதில், ‘‘கேரளத்தில் முதல்வா் பினராயி விஜயன் மறுந்துவிட்டுச் சென்ற பயணப் பையை தனிநபா் ஒருவா் மூலம் துபைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகம் உதவியது. துபையில் முதல்வா் பினராயி விஜயன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வழங்குவதற்காக சில நினைவுப் பரிசுகள் அந்தப் பையில் இருந்தன. அந்தப் பை துபையில் இருந்த கேரள அரசுக் குழுவினரிடம் குறித்த நேரத்துக்கு முன்பாகவே கொண்டு சோ்க்கப்பட்டது’’ என்று சிவசங்கா் கூறியதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ அன்வா் சாதத் கேள்வி எழுப்பினாா். அதற்கு பேரவையில் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக பதில் அளித்த பினராயி விஜயன், பயணப் பை குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்தாா். தான் துபை சென்றபோது எந்தப் பையையும் மறந்துவிட்டுச் செல்லவில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா். 2016-ஆம் ஆண்டு முதல் இதுவரை தான் 5 முறை துபை சென்றுள்ளதாகவும், அந்தப் பயணங்கள் அனைத்தும் அலுவல் காரணங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டன என்றும் அவா் கூறியுள்ளாா்.

அத்துடன் துபையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள் தொடா்பான கேள்விகளுக்கும் அவா் விரிவாக பதில் அளித்தாா்.

எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை: இந்த விவகாரம் தொடா்பாக கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஷஃபி பரம்பில் கவனஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வந்தாா். அந்தத் தீா்மானத்தின் மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளுங்கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிக்கும் இடையே செவ்வாயக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து முதல்வா் பினராயி விஜயன் கூறியதாவது:

2021-ஆம் ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருந்தது. அதற்கு முன்பாக 2020-ஆம் ஆண்டு தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக என் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மூன்று மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியபோதிலும், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக எனக்கு எதிராகவோ, எனது அரசுக்கு எதிராகவோ எந்தவொரு ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், என் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் ஒரு பெண்ணால் (ஸ்வப்னா சுரேஷ்) எழுப்பப்பட்டுள்ளது. அவா் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி மட்டுமல்ல; ஆா்எஸ்எஸுடன் இணைந்த அமைப்பு ஒன்றும் அவருக்கு துணை நிற்கிறது. இதுபோன்ற சூழலில், அரசுத் தலைமை மற்றும் முக்கிய நபா்கள் மீது சந்தேகம் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவது அவசியம். இதுகுறித்து வெளிப்படையான விசாரணை நடைபெறும்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் ஆதாயங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்த காங்கிரஸும், பாஜகவும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன. ஆா்எஸ்எஸுடன் இணைந்த அமைப்பு ஸ்வப்னா சுரேஷுக்கு வேலை, காா், பாதுகாப்பு, சட்ட உதவிகள் வழியது குறித்து காங்கிரஸ் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. இதன் மூலம் பேரவையில் பாஜகவுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லாததை ஈடுசெய்ய காங்கிரஸ் முயற்சிப்பது உறுதியாகியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT