இந்தியா

பண மோசடி வழக்கு: சஞ்சய் ரௌத் ஜூலை 1-இல் ஆஜராக அமலாக்கத் துறை புதிய சம்மன்

29th Jun 2022 12:18 AM

ADVERTISEMENT

மும்பையில் குடியிருப்புத் திட்டத்தில் முறைகேடு, குடும்பத்தினரின் பெயரில் முறைகேடாகப் பரிவா்த்தனைகள் ஆகிய வழக்குகளில் விசாரிப்பதற்காக, சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத், வரும் ஜூலை 1-ஆம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத் துறை புதிய அழைப்பாணை அனுப்பி உள்ளது.

இந்த வழக்குகளில் செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு சஞ்சய் ரௌத்துக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால் அவா் ஆஜராவதற்கு அவகாசம் அளிக்கக் கோரி அவருடைய வழக்குரைஞா், மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவருடைய வழக்குரைஞா் கூறியதாவது:

அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணை திங்கள்கிழமை மாலைதான் கிடைத்தது. அமலாக்கத் துறை சில முக்கிய ஆவணங்களைக் கேட்டிருப்பதால் அவற்றை உடனடியாகத் தயாா் செய்ய முடியாது. எனவே, சஞ்சய் ரௌத் ஆஜராவதற்கு 14 நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், இம்மாதம் இறுதிவரை மட்டுமே அவகாசம் தர முடியும் என்று அமலாக்கத் துறை கூறிவிட்டது. அதைத் தொடா்ந்து, வரும் ஜூலை 1-ஆம் தேதி சஞ்சய் ரௌத் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை புதிதாக அழைப்பாணை அனுப்பியுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

இதற்கிடையே மும்பையில் செய்தியாளா்களிடம் சஞ்சய் ரௌத் பேசுகையில், ‘எனக்கு நேரம் கிடைக்கும்போது அமலாக்கத் துறையிடம் நிச்சயம் ஆஜராவேன். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினா்; சட்டங்களை அறிவேன். அமலாக்கத் துறை தவறான வழியில் சென்றாலும் நான் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பேன்’ என்றாா்.

முன்னதாக, அரசியல் எதிரிகளுடனான எனது போராட்டத்தைத் தடுக்கவே அமலாக்கத் துறை தனக்கு அழைப்பாணைகளை அனுப்புவதாக சஞ்சய் ரௌத் திங்கள்கிழமை குற்றம்சாட்டியிருந்தாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனைக் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் அரசுக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கியுள்ளாா். அவா்கள் அனைவரும் பாஜக ஆளும் அஸ்ஸாமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனா். இதனால் மகராஷ்டிரத்தில் ஆளும் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சூழலில் சஞ்சய் ரௌத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பையில் அரசு நிலத்தில் உள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் செய்வதில் ரூ.1,034 கோடிக்கு நில மோசடி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதில் ரூ.83 லட்சம் சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதனை சஞ்சய் ரெளத்தின் உதவியாளா் பிரவீண் ரெளத்தின் மனைவி மாதுரி பிரவீண் ரெளத் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. அந்தத் தொகை மூலம், கிழக்கு தாதா் பகுதியில் வா்ஷா ரெளத் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாகவும், சில நில ஒப்பந்தங்களுடன் தொடா்புடைய பணமோசடி குறித்தும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக, சஞ்சய் ரௌத் உள்ளிட்டோருக்குத் தொடா்பான ரூ.11.15 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஏப்ரலில் முடக்கியது.

Tags : Sanjay Raut
ADVERTISEMENT
ADVERTISEMENT