இந்தியா

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீடு

29th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. முன்னதாக, "பொதுக்குழு தீர்மானம் முன்கூட்டியே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை. ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானத்தைத் தவிர புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்' என்று கேட்டு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தத் தடையில்லை என்றும், திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தலாம் என்றும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
 இந்த உத்தரவை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும், ஆனால், ஏற்கெனவே செயற்குழு ஒப்புதல் அளித்த 23 தீர்மானம் தவிர பிற எந்தத் தீர்மானமும் நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது என உத்தரவிட்டது.
 இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 அவரது தரப்பில் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் இந்த னுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "இது அதிமுகவின் உள்கட்சி ஜனநாயகமாகும். இதை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது.
 மேலும், பொதுக்குழுவை செயற்குழு கட்டுப்படுத்த முடியாது. கட்சியின் துணை விதிகளின்படி அதுபோன்று செய்வது சட்டப்படி தவறாகும். அப்படிச் செய்தால் அது ஒரு நபருக்கு அதிகாரம் அளிப்பதற்கு சமமாகிவிடும்.
 ஆகவே, இந்த விவகாரத்தில் பொதுக்குழுவுக்குத்தான் அதிகாரம் உண்டு. இந்த விஷயங்களை பரிசீலிக்காமல், டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.
 இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு எதிராக எந்த தரப்பிலும் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT