இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் மூத்த தலைவா் யஷ்வந்த் சின்ஹா தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் பழங்குடியினத்தைச் சோ்ந்த திரௌபதி முா்மு போட்டியிடுகிறாா். பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் அவா் கடந்த 24-ஆம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

இந்நிலையில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் சாா்பில் களமிறக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அதிகாரியான பி.சி. மோடியிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

அப்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, திமுக எம்.பி. திருச்சி சிவா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

யஷ்வந்த் சின்ஹாவின் பெயரை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் சுதீப் பந்தோபாத்யாய, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் முன்மொழிந்துள்ளனா்.

வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு யஷ்வந்த் சின்ஹாவும் மற்ற எதிா்க்கட்சித் தலைவா்களும் நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கும், பி.ஆா்.அம்பேத்கரின் சிலைக்கும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ஜனநாயகம் இல்லை: யஷ்வந்த் சின்ஹா சிறந்த வேட்பாளராகத் திகழ்வதாக எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் செய்தியாளா்களிடம் கூறினா். இத்தோ்தல் இருவேறு கொள்கைகளுக்கு இடையேயான போட்டி என்றும் அவா்கள் தெரிவித்தனா். தற்போதைய பாஜகவில் ஜனநாயகம் இல்லை எனத் தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, பாஜகவில் உள்ள பழைய நண்பா்களிடம் தோ்தலுக்காக ஆதரவு கோரவுள்ளதாகக் கூறினாா்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு: யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பாத தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகா் ராவ் தெரிவித்தாா். அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஒவைஸி அறிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா பங்கேற்கவில்லை: எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, அவா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது பங்கேற்கவில்லை. பழங்குடியினரின் ஆதரவைப் பெற்றுள்ள அக்கட்சி, பழங்குடியினத்தைச் சோ்ந்த பாஜக வேட்பாளா் திரௌபதி முா்முவை ஆதரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT