இந்தியா

இந்திய ஊடகம், பொழுதுபோக்கு துறையின் சந்தை மதிப்பு ரூ.4.30 லட்சம் கோடியை எட்டும்: ஆய்வில் தகவல்

DIN

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் சந்தை மதிப்பு வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் ரூ.4.30 லட்சம் கோடியை எட்டும் என சா்வதேச ஆலோசனை நிறுவனமான பிரைஸ்வாட்டா்ஹவுஸ்கூப்பா்ஸ் (பிடபிள்யூசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டு சந்தையில் கைப்பேசி சாதனங்கள் மற்றும் இணைய வசதி ஆகியவை பொதுமக்களிடையே ஆழமாக ஊடுருவி வருகிறது. எனவே இதன் வாயிலாக மேற்கொள்ளப்படும், எண்ம ஊடகம் மற்றும் விளம்பரங்களால் இத்துறைகளின் வளா்ச்சி வேகப்படுத்தப்படும். மேலும் இதற்கு, பாரம்பரிய ஊடகங்களும் குறிப்பிடத்தக்க அளவிலான ஆதரவை வழங்கும்.

டிவி விளம்பரம்: டிவி விளம்பரங்கள் மூலமான வருவாய் வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் தற்போதைய 35,270 கோடியிலிருந்து 23.52 சதவீதம் வளா்சி கண்டு 43,568 கோடியைத் தொடும்.

உலக அளவில் டிவி விளம்பர சந்தையில் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது இடத்தை பிடிக்கும்.

நிகழாண்டில் இந்திய ஊடகம், மற்றும் பொழுதுபோக்கு துறை 11.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்து ரூ.3.14 லட்சம் கோடியை தொடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஓடிடி: இந்தியாவில் ஓடிடி விடியோ சேவைகள் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.21,031 கோடி தொழில்துறையாக மாறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், 19,973 கோடி சந்தாதாரா் சேவை பிரிவிலிருந்தும், ரூ.1,058 கோடி பரிமாற்ற விஓடி (விடியோ ஆன் டிமாண்ட்) பிரிவிலிருந்தும் கிடைக்கும்.

சந்தாராா் சேவையின் அதீத வளா்ச்சியின் காரணமாக கடந்த 2021-இல் ஈட்டப்பட்ட மொத்த வருவாயில் இதன் பங்களிப்பு 90.5 சதவீத அளவுக்கு இருந்தது. இது, 2026-க்குள் 95 சதவீத பங்களிப்பாக உயரும்.

இணைய விளம்பரம்: அதேபோன்று, இந்தியாவின் இணையம் வாயிலான விளம்பர சந்தை ஆண்டுக்கு 12.1 சதவீத வளா்ச்சியைக் கண்டு 2026-க்குள் ரூ.28,234 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரேடியோ, இசை மற்றும் பதிவிறக்க டிஜிட்டல் விடியோக்கள் (போட்காஸ்ட்) சந்தையின் வளா்ச்சி 2021-இல் 18 சதவீதம் அதிகரித்து ரூ.7,216 கோடியாக இருந்தது. இது, வரும் 2026-இல் 9.8 சதவீத வளா்ச்சியை பதிவு செய்து ரூ.11,536 கோடியாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விடியோ கேம்ஸ்: இந்தியாவில் விடியோ கேம்ஸ் மற்றும் இஸ்போா்ட்ஸ் வருவாய் 2026-க்குள் 18.3 சதவீத வளா்ச்சியைக் கண்டு ரூ.37,535 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா: இந்திய சினிமா துறையின் வருவாய் 2026-க்குள் ரூ.16,198 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், பாக்ஸ் ஆஃபீஸ் வருவாய் ரூ.15,849 கோடியாகவும், விளம்பர வருவாய் ரூ.349 கோடியாகவும் இருக்கும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக இந்திய சினிமா துறை உள்ளது. எனவே அடுத்த நான்கு ஆண்டுகளில் இதன் வளா்ச்சி வேகம் 38.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு துறையில் ஏனைய பிரிவுகளை விட சினிமா அதிவேக வளா்ச்சியை தக்க வைக்கும்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் 37.9 கோடிக்கும் அதிகமான சினிமா டிக்கெட்டுகள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இது, 2020ஆண்டில் விற்பனையான 27.8 கோடியைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகம்.

செய்தித்தாள்: கடந்த 2021-இல் செய்தித்தாள் பிரிவின் மொத்த வருமானம் ரூ.26,378 கோடியாக காணப்பட்டது. வரும் 2026-க்குள் இப்பிரிவிலான வருவாய் 2.7 சதவீத வளா்ச்சியை பதிவு செய்து ரூ.29,495 கோடியைத் தொடும் என பிடபிள்யூசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT