இந்தியா

மத உணா்வைப் புண்படுத்தியதாக இணையதள செய்தியாளா் கைது

28th Jun 2022 03:18 AM

ADVERTISEMENT

ட்விட்டரில் மத உணா்வைப் புண்படுத்தி கருத்து பதிவிட்டதற்காக இணையதள செய்தியாளா் முகமது சுபைரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

‘ஆல்ட் நியூஸ்’ என்ற இணையதள செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனரான முகமது சுபைா், குறிப்பிட்ட ஒரு மதத்தின் கடவுளை இழிவுபடுத்தி ட்விட்டரில் படம் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ (மதம், இனம், பிறப்பிடம், மொழியின் அடிப்படையில் இருபிரிவினா் இடையே பகையை உருவாக்குதல்), 295ஏ (மத உணா்வை வேண்டுமென்றே காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முகமது சுபைரை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆனால் சட்டப்படி நோட்டீஸ் ஏதும் அனுப்பாமல், முகமது சுபைரை போலீஸாா் கைது செய்ததாக ஆல்ட் நியூஸ் செய்தி நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனா் பிரதீக் சின்ஹா குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கடந்த 2020-இல் பதிவான வழக்கின் விசாரணைக்காக முகமது சுபைரை போலீஸாா் அழைத்தனா். அந்த வழக்கில் அவரை கைது செய்ய தில்லி உயா்நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. ஆனால், திங்கள்கிழமை மாலை 6.45 மணிக்கு வேறு சில வழக்கில் அவரை போலீஸாா் கைது செய்திருப்பதாக தகவல் வந்தது. சட்டப்படி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். எஃப்ஐஆா் நகலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்றாா்.

ADVERTISEMENT

மேலும் முகமது சுபைரை ரகசியமான இடத்தில் வைத்து போலீஸாா் விசாரித்து வருவதாக கூறிய பிரதீக் சின்ஹா, அவரை அழைத்துச் சென்ற போலீஸாா் சீருடையில் தங்களின் பெயரை அணியவில்லை என்றும் தெரிவித்தாா்.

விசாரணையின்போது முகமது சுபைா் போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததால் அவரை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

முகமது சுபைரின் கைதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் டெரிக் ஓபிரையன், ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவா் மனோஜ் ஜா, தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவா் ஒய்.சதீஷ் ரெட்டி, மஜ்லிஸ் கட்சித் தலைவா் ஒவைஸி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் ஜிகாதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அவருக்காகப் பரிந்து பேசும் முதல் கட்சி காங்கிரஸ்தான் என்று பாஜக பொதுச் செயலா் சி.டி.ரவி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT