இந்தியா

போர் விமானத் தயாரிப்பு நிறுவனம் தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும் 

28th Jun 2022 05:32 AM

ADVERTISEMENT

114 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியைப் பெறும் நிறுவனம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் அந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வேண்டியிருக்கும் என்று இந்திய விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆர்.சௌதரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியது:
இந்திய விமானப் படை தனது பயன்பாட்டுக்காக 114 நவீன போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தக் கொள்முதலானது இந்திய விமானப் படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.

114 போர் விமானங்களையும்  1800 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1. 41 லட்சம் கோடி) மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை இந்திய விமானப் படை கடந்த 2019 ஏப்ரல் மாதம் வெளியிட்டது.

இந்த ஏலத்தில் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் எஃப்-21, போயிங் நிறுவனத்தின் எஃப்ஏ-18, டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் ரஃபேல், ரஷிய விமானமான மமிக் 35, சாப் என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனத்தின் கிரிபன் ஜெட் ஆகியவை பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த ஒட்டுமொத்த ஏலமும் 2020-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாதுகாப்புத் துறை கொள்முதல் நடைமுறையின்படி மேற்கொள்ளப்படும். மேலும் விமானங்களைத் தயாரிப்பதற்குத் தேர்வு செய்யப்படும் நிறுவனமமானது விமானத் தயாரிப்பு தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டியிருக்கும். மேலும் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டப்படி விமானங்களை நம் நாட்டில் தயாரிக்க வேண்டியிருக்கும்.  

இது உள்நாட்டிலேயே போர் விமானங்களைத் தயாரிக்கும் நமது திறனை மேம்படுத்துவதாக அமையும். இந்திய விமானப் படை வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க பல்வேறு நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன.
இந்திய விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட 42 போர் விமானத் தொகுப்புகள் அடுத்த 10-15 ஆண்டுகளில் அதற்குக் கிடைக்காது என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் விமானப் படை தனது பலத்தைத் தக்க வைக்க இரட்டை அம்ச உத்தி பின்பற்றப்படுகிறது. புதிய தலைமுறை விமானங்களைக் கொள்முதல் செய்வது, தற்போதுள்ள விமானங்களைத் தரம் உயர்த்துவது என்பதே இரட்டை அம்ச உத்தியாகும்.

114 புதிய போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதும் 83 இலகுரக தாக்குதல் விமானங்களை வாங்குவதும் இந்திய விமானப் படை தனது தாக்குதல் திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

ஐந்தாம் தலைமுறை மத்திய ரக எடை கொண்ட போர் விமானங்களை 500 கோடி டாலர் செலவில் உருவாக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) இதில் ஈடுபட்டுள்ளது என்றார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT