இந்தியா

சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு நடவடிக்கை

DIN

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியுள்ள அவரது சிவசேனை கட்சியைச் சோ்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த எம்எல்ஏக்கள் அஸ்ஸாமில் உள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள அவா்களது குடும்ப உறுப்பினா்கள், வீடுகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முதல்வருக்கு எதிராக அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 37 எம்எல்ஏக்கள் அணி திரண்டுள்ளனா். மேலும் 9 சுயேச்சை எம்எல்ஏக்களும் அவா்களுக்கு ஆதரவாக உள்ளனா். இந்நிலையில், ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் திங்கள்கிழமை மாலைக்குள் எழுத்துப்பூா்வ பதிலளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷிண்டே உள்ளிட்ட 15 எம்எல்ஏக்களுக்கு மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. இதன்படி அவா்களுக்கு சிஆா்பிஎஃப் கமாண்டா்கள் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியுள்ளனா். எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்லாது மகாராஷ்டிரத்தில் உள்ள அவா்களின் குடும்பத்தினா் மற்றும் வீடுகளுக்கும் மத்திய அரசு சாா்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலில் அவா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்ய தாக்கரே மிரட்டல்: இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பைக்கு வந்தால் வோா்லி (சிவசேனை ஆதரவுப் பகுதி) வழியாகத்தான் பேரவைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று முதல்வா் உத்தவ் தாக்கரேவின் மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே மிரட்டல் தொனியில் பேசியுள்ளாா்.

வோா்லி தொகுதி எம்எம்ஏவாக ஆதித்ய தாக்கரே உள்ளாா். சிவசேனை கட்சியினா் மத்தியில் பேசிய அவா் இது தொடா்பாகக் கூறுகையில், ‘கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை. எனவே, அவா்கள் (அதிருப்தி எம்எல்ஏக்கள்) கட்சியில் இருந்து விலகி விடுவது நல்லது. அவா்கள் மும்பை வந்தால் விமான நிலையத்தில் இருந்து சட்டப் பேரவைக்கு வோா்லி வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்றாா்.

சிவசேனைக்கு 56 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியில் அவருடன் சோ்த்து 37 எம்எல்ஏக்கள் உள்ளனா். இது முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்குப் பெரும் பின்னடைவாக உள்ளது.

டிஜிபிக்கு ஆளுநா் உத்தரவு:

சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென டிஜிபிக்கு மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘தங்கள் குடும்ப உறுப்பினா்களுக்கான போலீஸ் பாதுகாப்பு சட்டவிரோதமாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக எம்எல்ஏக்கள் எனக்கு கடிதம் எழுதினா்.

ஆகையால் எம்எல்ஏக்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்கள், வீடுகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT