இந்தியா

'துரோகிகள் ஜெயிக்க மாட்டார்கள்': சொன்னது தமிழ்நாட்டுத் தலைவர் அல்ல

27th Jun 2022 05:00 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, துரோகம் செய்தவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என மாநில அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அந்தக் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜூன் 27-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்குமாறு 16 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு சட்டப்பேரவைச் செயலகம் கடந்த சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவு திரும்பப் பெறப்படுவதாகவும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க‘அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்’: சஞ்சய் ரெளத்

ADVERTISEMENT

இதுதொடர்பாக, சட்டப்பேரவைத் துணைத் தலைவர், சட்டப்பேரவைச் செயலாளர், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

இந்த நிலையில், மகாராஷ்டிர முன்னேற்ற முன்னணி அரசு கவிழாது என எந்தளவுக்கு நம்பிக்கை உள்ளது என ஆதித்ய தாக்கரேவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்தாவது:

"நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லா அன்பும் எங்களுக்கு உள்ளது. துரோகம் செய்தவர்கள் வெற்றி பெறமாட்டார்கள். தப்பித்து ஓடியவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்" என்றார்.

இதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே அணியில் மகாராஷ்டிர அமைச்சர் உதய் சமந்த் இணைந்தது, சஞ்சய் ரௌத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது உள்ளிட்டவை பற்றி அவர் கூறியதாவது: 

"அது (உதய் சமந்த்) அவருடைய முடிவு. ஆனால், அவர் எங்களிடம் ஒருநாள் வருவார். எங்களைப் பார்த்தே ஆக வேண்டும். பார்க்கலாம். இது அரசியல் அல்ல. தற்போது சர்கஸ் ஆகிவிட்டது. இங்கிருந்து சென்றவர்கள் தங்களைத் தாங்களே கிளர்ச்சியாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் கிளர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்றால், அதை இங்கிருந்தபடியே செய்ய வேண்டும். ராஜிநாமா செய்து தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். அவர்கள் என் கண் முன் அமர்ந்து என் கண்களைப் பார்த்து நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று சொன்னால்தான் இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்" என்றார் ஆதித்ய தாக்கரே.

தமிழ்நாட்டில் அதிமுக கட்சிக்குள் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையே குழப்பம் நீடித்து வருகிறது. இதனால், இங்குள்ள அரசியல் சூழலிலும் துரோகம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துரோகத்தின் அடையாளம் ஓ. பன்னீர்செல்வம்தான் என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று (திங்கள்கிழமை) காலை விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT