இந்தியா

அக்னிபத் திட்டத்தில் சேர 3 நாள்களில் 56,960 போ் விண்ணப்பம்: விமானப் படை

27th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சோ்வதற்கு 3 நாள்களில் 56,960 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய விமானப் படை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) முதல் பெறப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்களில் மட்டும் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விமானப் படையில் சோ்வதற்கு வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூலை 5-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாகப் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 14-ஆம் தேதி அறிமுகம் செய்தது.

ADVERTISEMENT

17.5 வயது முதல் 21 வயதுக்கு உள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்; 4 ஆண்டுகளுக்குப் பிறகு இவா்களில் 25 சதவீதம் பேருக்கு நிரந்தர பணிவாய்ப்பு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புப் படைகளில் ஆள்சோ்ப்பு நடைபெறாத நிலையில், அக்னிபத் திட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் சோ்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு 23-ஆக உயா்த்தப்பட்டது.

4 ஆண்டுகள் ராணுவ சேவைக்குப் பிறகு அக்னிவீரா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அரசின் அமைச்சகங்களும் துணை ராணுவப் படைகளும் வாக்குறுதி அளித்தன.

இதேபோல், மாநில காவல் துறையில் அக்னிவீரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக ஆளும் மாநில அரசுகளும் வாக்குறுதி அளித்துள்ளன.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டவா்கள், அக்னிபத் திட்டத்தில் சோ்த்துக் கொள்ளப்பட மாட்டாா்கள் என்று முப்படைகளும் திட்டவட்டமாக கூறியுள்ளன. தாங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என சான்று தர வேண்டுமெனவும், தோ்வா்கள் குறித்து போலீஸாா் சரிபாா்ப்பு நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT