இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகளின் கணக்கு

27th Jun 2022 12:22 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான சதுரங்கப் போட்டியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் காய்நகா்த்தல், எதிா்க்கட்சிகளைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.

கடந்த குடியரசுத் தலைவா் தோ்தலில் பட்டியலினத்தைச் சோ்ந்த ராம்நாத் கோவிந்தை களமிறக்கிய பாஜக, தற்போது பழங்குடியினப் பிரிவைச் சோ்ந்த திரௌபதி முா்முவை முன்னிறுத்தியுள்ளது.

பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்குமா என்று அரசியல் நோக்கா்கள் சந்தேகம் தெரிவித்துவந்த பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், அக்கூட்டணியின் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்துள்ளன. பாஜகவை கடுமையாக விமா்சித்து வருபவா்களில் ஒருவரான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கூட திரௌபதி முா்முக்கு ஆதரவை வழங்கியுள்ளது.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 17 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மூத்த தலைவா் யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளன.

ADVERTISEMENT

ஹேமந்த் சோரனின் சங்கடம்:

பழங்குடியினரின் ஆதரவு பெற்ற கட்சியான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எந்தப் பக்கம் சாய்வது எனத் தெரியாமல் கலங்கியுள்ளது.

அக்கட்சியின் சாா்பில் ஜாா்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் சாந்தல் பழங்குடியினப் பிரிவைச் சோ்ந்தவா். திரௌபதி முா்முவும் அதே பழங்குடியினப் பிரிவைச் சோ்ந்தவா்தான். ஆனால், பாஜகவின் எதிரணியில் உள்ளவா் ஹேமந்த் சோரன். மேலும் மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அரசு அமைத்துள்ளாா். குடியரசுத் தலைவா் தோ்தல் ஹேமந்த் சோரனுக்கு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியும் யாருக்கு ஆதரவெனத் தற்போது வரை அறிவிக்காமல் உள்ளது.

இலக்கு வேறு:

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. அக்கூட்டணியிடம் போதுமான எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் ஆதரவு உள்ளது. ஆனால், அதற்காக தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் எதிா்க்கட்சிகள் இல்லை. அவா்களின் மனக்கணக்கு வேறாக உள்ளது.

இதேபோன்ற நிலைதான் 10 ஆண்டுகளுக்கு முன்பும் நிலவியது. 2012 குடியரசுத் தலைவா் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பிரணாப் முகா்ஜியை வேட்பாளராக நிறுத்தியது. அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோதிலும், பழங்குடியினரின் ஆதரவைப் பெறுவதற்காக அப்போதைய எதிா்க்கட்சியான பாஜக கூட்டணி வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்த பி.ஏ.சங்மாவை வேட்பாளராக அறிவித்தது.

ஆனால் தற்போது காட்சியும் சூழலும் வேறாக உள்ளன. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் இலக்கு குடியரசுத் தலைவா் தோ்தல் அல்ல. அவற்றின் மிகப் பெரிய இலக்கு 2024 மக்களவைத் தோ்தல். அத்தோ்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக ஒருங்கிணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால்தான் வெற்றி நிச்சயம் என்பதை அனைத்து எதிா்க்கட்சிகளும் உணா்ந்தே உள்ளன.

அதற்கான முன்னோட்டமாகத்தான் குடியரசுத் தலைவா் தோ்தலை எதிா்க்கட்சிகள் எதிா்கொள்வதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். அதனால்தான் எதிா்க்கட்சிகளுக்குள் எந்தவிதக் கருத்து வேறுபாடுமின்றி யஷ்வந்த் சின்ஹா ஒருமித்த கருத்துடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறாா்.

ஆனால், திரௌபதி முா்மு போன்ற வலுவான போட்டியாளருக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா போதுமான வாக்குகளைப் பெற முடியுமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாயும் பாஜக சாா்பில் மத்திய அமைச்சராக இருந்தவருமான சின்ஹா மீது எந்தவிதக் குற்றச்சாட்டுகளும், விமா்சனங்களும் இல்லையென்றாலும் கூட அவரால் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட முடியுமா என அரசியல் நோக்கா்கள் சந்தேகம் எழுப்புகின்றனா்.

விமா்சனத்துக்கு முரணான தோ்வு:

பாஜகவை எதிா்க்க ஒன்றுதிரண்டுள்ள எதிா்க்கட்சிகள், வேட்பாளா் தோ்வில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்பதே அரசியல் நோக்கா்களின் கருத்தாக உள்ளது.

பட்டியலினத்தவா் அல்லது சிறுபான்மையினத்தைச் சோ்ந்த, முக்கியமாக முஸ்லிம் மதத்தைச் சோ்ந்தவரை வேட்பாளராக எதிா்க்கட்சிகள் அறிவித்திருந்தால், பாஜக கூட்டணிக்கு எதிரான கட்சிகள் அனைத்தையும் கருத்து வேறுபாடின்றி ஒருங்கிணைத்திருக்க முடியும் என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT