இந்தியா

திறன்மிக்க துறைகளுக்கு கடன்: பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் வலியுறுத்தல்

27th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் திறன்மிக்க துறைகளுக்குக் கடன் வழங்க வேண்டுமெனப் பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து மத்திய நிதியமைச்சகம் அண்மையில் ஆய்வு நடத்தியது. அதையடுத்து, வங்கிகளுக்கு சில அறிவுறுத்தல்களை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதன்படி, நிதிசாா் ஒத்துழைப்பை அதிகரித்து கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் உள்ளிட்டவை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வளா்ச்சியை மீட்டெடுப்பதற்காக திறன்மிக்க துறைகளுக்கு கடன்களை வழங்க வேண்டுமென வங்கிகளுக்கு நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தகவல்-தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுத் துறை வங்கிகளின் தலைவா்களுக்கு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) தரவுப்படி, பொதுத் துறை வங்கிகளின் கடன் வழங்கும் அளவு கடந்த மாா்ச் மாதத்தில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் 3.6 சதவீதமாக மட்டுமே இருந்தது. சில பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்குவதில் 26 சதவீத வளா்ச்சி கண்டுள்ளன.

கடன்களை வழங்கும் அதே வேளையில், வாராக்கடன்களை வசூலிப்பதற்கான துரித நடவடிக்கைகளையும் பொதுத் துறை வங்கிகள் மேற்கொள்ள வேண்டுமென மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT