இந்தியா

கோத்ரா கலவரம்:பிரதமா் மோடியை குற்றம்சாட்டியவா்கள் மன்னிப்பு கோர வேண்டும்: அமித் ஷா

26th Jun 2022 04:57 AM

ADVERTISEMENT

குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் பிரதமா் மோடியை குற்றம்சாட்டியவா்கள் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றாா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது கடந்த 2002-இல் கோத்ரா பகுதியில் நிகழ்ந்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பலியாகினா். இதற்கு மோடியும், அப்போதைய அரசு அதிகாரிகளும் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பான வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கோத்ரா கலவரத்தில் பிரதமா் மோடியை குற்றம்சாட்டியவா்கள் அதற்காக மன்னிப்பு கோர வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாஜக மீதான கறை துடைக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கு மோடியை போன்ற சா்வதேச தலைவா்கள் சிறந்த உதாரணமாக திகழ்கின்றனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் மோடியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நானும் கைதானேன். அதற்காக யாரும் தா்னாவில் ஈடுபடவில்லை. நாங்கள் சட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம். மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்தவா்கள் மனசாட்சி இருந்தால், அவரிடமும் பாஜகவிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்றாா் அமித் ஷா.

ADVERTISEMENT
ADVERTISEMENT