இந்தியா

‘பாலாசாகேப் தாக்கரே பெயரைப் பயன்படுத்தக் கூடாது’: எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

25th Jun 2022 06:39 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே அணியினர் சிவசேனை பாலாசாகேப் என புதிய பிரிவை உருவாக்கியுள்ள நிலையில் யாரும் பாலாசாகேப் தாக்கரே பெயரைப் பயன்படுத்தக்கூடாது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே 40-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் சூரத் சென்று அசாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ளார். இதனால் மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணியின் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கர்நாடகத்தில் தலித் இளைஞரை மாட்டு சாணத்தை உண்ண வைத்த கொடூரம்

இந்த நிலையில், குவஹாட்டியிலுள்ள ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ-க்கள், தங்களது அணிக்கு சிவசேனை பாலாசாகேப் எனப் புதிய பெயரை சூட்டியுள்ளனர். இதற்கு சிவசேனை கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக சனிக்கிழமை பேசிய அவர், “சிலர் ஏதாவது தெரிவிக்கச் சொல்கின்றனர். இதுதொடர்பாக ஏற்கெனவே நான் கருத்து தெரிவித்துவிட்டேன். அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்யட்டும். அதில் நான் தலையிடப் போவதில்லை. ஆனால் யாரும் பாலாசாகேப் தாக்கரே பெயரைப் பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | சிவசேனை பாலாசாகேப்: புதிய பெயர் சூட்டிய ஷிண்டே ஆதரவாளர்கள்

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அசாமில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம் எல் ஏக்கள் 16 பேருக்கு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் தகுதிநீக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிருப்தி எம்ஏல்ஏக்கள் ஜூன் 27ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT