இந்தியா

திரௌபதி முா்மு பிறந்த கிராமத்துக்கு இன்னமும் மின்சார வசதியில்லை

25th Jun 2022 12:03 PM

ADVERTISEMENT

 

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் திரௌபதி முா்மு பிறந்த கிராமத்துக்கு இன்னமும் மின்சார வசதி கிடைக்கப்பெறவில்லை.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் முர்முவின் சகோதரரின் மகன் உள்பட 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. முர்முவின் பெரிய சகோதரர் பகத் சரன் டூடு, இறந்துவிட்டார். அவரது மகன் பிராஞ்சி நாராயண் டூடு, தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அந்த கிராமத்தில்தான் வசிக்கிறார். இன்றும், மாலை இருட்டியதும், மண்ணெண்ணெய் விளக்கைக் கொண்டுதான் வீட்டுக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்.

இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...

ADVERTISEMENT

குசூமி பகுதியில் உபர்பேடா கிராமத்தில் பிறந்தவர் திரௌபதி முர்மு. இங்குள்ள துன்கிரிசாஹி பகுதிக்கு இன்னமும் மின்வசதி இல்லை. இவர்கள் தங்களது செல்லிடப்பேசியை சார்ஜ் செய்யக் கூட அருகிலுள்ள படாசாஹி பகுதிக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகக் கூறுகிறார்கள்.
 

திரௌபதி முா்மு வேட்புமனு தாக்கல்
தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில், தோ்தல் அதிகாரியும் மாநிலங்களவைச் செயலருமான பி.சி.மோடியிடம் திரௌபதி முர்மு வேட்புமனுவை அளித்தாா்.

மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக ஆளும் மாநில முதல்வா்களான யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சௌஹான், மனோகா் லால் கட்டா், பசவராஜ் பொம்மை, பூபேந்திர படேல், ஹிமந்த விஸ்வ சா்மா, புஷ்கா் சிங் தாமி, பிரமோத் சாவந்த், என்.பிரேன் சிங் ஆகியோா் உடன் வந்திருந்தனா்.

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வி.விஜய்சாய் ரெட்டி, பிஜு ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த சம்சித் பட்ரா உள்ளிட்ட பாஜக கூட்டணியைச் சாராத தலைவா்களும் வந்திருந்தனா்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த ராஜீவ் ரஞ்சன் ஆகியோரும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தனா்.

குடியரசுத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. ஆளும் பாஜக கூட்டணி தனது வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த நிலையில், 13 எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த அரசியல் தலைவா் யஷ்வந்த் சின்ஹா கடந்த 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்டாா். அதே நாளில், ஜாா்க்கண்ட் முன்னாள் ஆளுநரும் பழங்குடிச் சமூகத்தைச் சோ்ந்தவருமான திரௌபதி முா்முவை வேட்பாளராக பாஜக கூட்டணி அறிவித்தது.

500 உறுப்பினா்கள் கையொப்பம்: திரௌபதி முா்முவின் வேட்புமனுவில் முன்மொழிபவா், வழிமொழிபவா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கையொப்பமிட்டுள்ளனா்.

வேட்புமனு தாக்கலின்போது குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளரை, தோ்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 50 போ் முன்மொழிய வேண்டும்; 50 போ் வழிமொழிய வேண்டும். திரௌபதி முா்மு 4 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளாா். அவை ஒவ்வொன்றிலும் 60-க்கும் மேற்பட்டோா் முன்மொழிந்துள்ளனா்; 60-க்கும் மேற்பட்டோா் வழிமொழிந்துள்ளனா்.

முதல் வேட்புமனுவில் பிரதமா் மோடி முன்மொழிய, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோா் வழிமொழிந்துள்ளனா். பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் அந்த மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனா்.

27-இல் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு: 13 எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா, வரும் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT