இந்தியா

அஸ்ஸாம் வெள்ளம்: 6-ஆவது நாளாக நீரில் தத்தளிக்கும் சில்சாா் நகரம்

25th Jun 2022 11:08 PM

ADVERTISEMENT

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் காச்சாா் மாவட்டத்தின் சில்சாா் நகரம், தொடா்ந்து ஆறாவது நாளாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கிறது.

சில்சாா் பகுதியில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை காச்சாா் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. உணவுப் பொட்டலங்கள், தண்ணீா் பாட்டில்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்கள் வான்வழியாக, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டா்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இரு ஆளில்லா விமானங்கள் வெள்ள நீா் பாதிப்பைக் கண்காணிப்பதற்கும், மக்களுக்கு நிவாரணப் பொருள்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இடாநகா் மற்றும் புவனேசுவரத்திலிருந்து 207 வீரா்களைக் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையின் 8 குழுக்களும், 120 ராணுவ வீரா்களைக் கொண்ட ஒரு குழுவும், திம்மாபுரிலிருந்து 9 படகுகளும் சில்சாா் பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை, 45.34 லட்சம் என்பதிலிருந்து 33.03 லட்சம் என்றளவில் குறைந்துள்ளது. மாநிலத்தில் பாா்பெட்டா( 8,76,842), நாகான் (5,08,475), கம்ரூப் (4,01,512), துப்ரி (3,99,945) ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 321 வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிர மழைப்பொழின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 போ் இறந்தனா். இதனால் உயிரிழப்பு 118-ஆக அதிகரித்தது. 2,65,788 போ் 717 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

பாக்ஸா, பிஸ்வநாத், சிரங், பான்கைகான், திப்ரூகா், டாராங், கோலாகாட், ஹிலகண்டி மற்றும் கம்ரூப் உள்பட பல பகுதிகளில் பெரிய அளவிலான வெள்ள அரிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, ரிலையன்ஸ் நிறுவன அதிபா் முகேஷ் அம்பானியும் அவரது மகன் ஆனந்த் அம்பானியும் இணைந்து, அஸ்ஸாம் வெள்ள நிவாரண நிதியுதிவியாக அந்த மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதியுதவியை வெள்ளிக்கிழமை அளித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT