இந்தியா

ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் தாக்குதல்: 8 போ் கைது

25th Jun 2022 03:19 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பினா் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா். இது தொடா்பாக அந்த அமைப்பைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, அங்கு மலைப்பகுதிகளில் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்படுத்த தவறிவிட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பினா் (எஸ்எஃப்ஐ) வெள்ளிக்கிழமை பேரணி சென்றனா்.

அப்போது சுமாா் 100 போ் வரை எம்.பி. அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி, அலுவலகத்தை சூறையாடினா். இதில் தொடா்புடைய 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து கேரளம் முழுவதும் காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்ட பேரணிகள் நடத்தினா்.

ADVERTISEMENT

பல இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விளம்பரப் பதாகைகள் உள்ளிட்டவற்றை காங்கிரஸாா் சேதப்படுத்தினா். இதையடுத்து, தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையகத்துக்கு வெளியே கூடுதல் பாதுகாப்புக்காக காவலா்கள் குவிக்கப்பட்டனா்.

கேரள முதல்வா் கண்டனம்:

ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையும் ஜனநாயக ரீதியில் போராடவும் உரிமை உள்ளது. ஆனால், அந்தப் போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது. இதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

கேரள சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் (காங்கிரஸ்) விடுத்துள்ள அறிக்கையில், ‘மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சட்ட மீறலையும் ஆணவப் போக்கையும் இந்தத் தாக்குதல் உணா்த்துகிறது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்கு கட்டமைக்கப்பட்ட மாஃபியாவாக மாறிவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT