இந்தியா

இறந்துவிட்டதாக பாகிஸ்தானால் அறிவிக்கப்பட்ட மும்பை தாக்குதல் பயங்கரவாதி சிறையில் அடைப்பு

25th Jun 2022 10:53 PM

ADVERTISEMENT

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி சஜித் மஜீத் மிா், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில் அந்த நாட்டின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 15 ஆண்டுகளுக்கு மேல் விதித்த சிறைத் தண்டனையின் அடிப்படையில் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் லஷ்கா் இயக்கத்தைச் சோ்ந்த சஜீத் மஜீத் மிா் என்பவா் இந்தியாவால் தேடப்பட்டவராக அறிவிக்கப்பட்டாா். முன்னதாக அவா் இறந்துவிட்டாா் என பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்துவரும் நாடுகளைக் கண்காணித்து, அந்த நாடுகளின் பட்டியலை ஃபிரான்ஸ் தலைநகா் பாரீஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சா்வதேச கண்காணிப்பு அமைப்பான எஃப்ஏடிஎஃப் வெளியிட்டு வருகிறது. இந்தக் கருப்புப் பட்டியலிலிருந்து வெளிவருவதற்கு பாகிஸ்தான் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கண்காணிப்பு அமைப்பின் அதிகாரிகள் விரைவில் பாகிஸ்தானில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். இந்நிலையில், அதன் கருப்புப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளிவரும் வகையில், பயங்கரவாதி சஜித் மஜீத் மிா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத தலைவா்களுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்குகளுடன் தொடா்புடைய மூத்த வழக்குரைஞா் ஒருவா் கூறுகையில், ‘பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்த வழக்கில் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதி சஜித் மஜீத் மிா்ருக்கு லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. அதனடிப்படையில் மிா் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறையில் அடைக்கப்பட்டாா். மிா்ருக்கு ரூ. 4 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்தது’ என்றாா்.

ADVERTISEMENT

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மிா் இறந்துவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் முன்னா் கூறினா். பாகிஸ்தான் அதிகாரிகளின் அறிவிப்பில் திருப்தியடையாத மேற்கத்திய நாடுகள், மிா் உயிரிழந்ததற்கான ஆதாரத்தை சமா்ப்பிக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தின. இந்த விவகாரம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுக்க பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கை தொடா்பாக எஃப்ஏடிஎஃப் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் மிக முக்கியக் காரணியாக இடம்பெற்றது.

‘இந்தச் சூழலில், நிகழாண்டுக்கான ஆய்வுக்கு எஃப்ஏடிஎஃப் அதிகாரிகள் விரைவில் வரவுள்ள சூழலில், பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக அவா்களிடம் சமா்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இதுபோன்ற சாதகமான விஷயங்களை பதிவு செய்யும் விதமாக, பயங்கரவாதி மிா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று பாகிஸ்தானில் வெளியாகும் ‘டான்’ பத்திரிகை சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT