இந்தியா

திரௌபதி முர்முவுக்கு ஆதரவு: மாயாவதி அறிவிப்பு

25th Jun 2022 10:50 AM

ADVERTISEMENT

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு(64) அறிவிக்கப்பட்டுள்ளார். பழங்குடியினப் பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக ஆதரவுக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் முர்மு, நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். 

அதேநேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்துள்ளன.

பாஜக மற்றும் எதிர்க்கட்சி சார்பில்லாத கட்சிகள் யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழும்பியுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

'தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்க்கட்சிக்கு எதிராகவோ இந்த முடிவை எடுக்கவில்லை. எங்கள் கட்சி மற்றும் இயக்கத்தை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்' என்று விளக்கம் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் தரப்பில்  குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா வருகிற ஜுன் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். 

இதையும் படிக்க | குடியரசுத் தலைவா் தோ்தல்: திரௌபதி முா்மு வேட்புமனு தாக்கல்

ADVERTISEMENT
ADVERTISEMENT