இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: சரத் பவார் தலைமையில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சிக் கூட்டம்

21st Jun 2022 11:58 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளரைத் தேர்வு செய்ய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் தில்லியில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. 

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும்பொருட்டு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி எதிர்க்கட்சிக் கூட்டத்தினை ஏற்பாடு செய்தார். இதன் முதல் கூட்டம் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. 

அதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக உள்ளிட்ட 17 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், பொது வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய எதிர்க்கட்சிகள் கூட்டம் மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, வேட்பாளரைத் தேர்வு செய்யும் இறுதிக்கூட்டம் தில்லியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சரத் பவார் தலைமையில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கும் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார். 

ADVERTISEMENT

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா ஆகியோரைத் தொடா்ந்து, கோபாலகிருஷ்ண காந்தியும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளாா். இதையடுத்து மத்திய முன்னாள் அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா(திரிணமூல்)வை போட்டியிட வைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

திரிணமுல் காங்கிரஸில் இருந்த வந்த யஷ்வந்த் சின்ஹா, தற்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.  

இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல்: கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட மறுப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT