இந்தியா

வாக்காளா்கள் 2023 ஏப்.1-க்குள் ஆதாா் எண்ணை தெரிவிக்க வேண்டும்: மத்திய அரசு

19th Jun 2022 12:26 AM

ADVERTISEMENT

 வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள் தங்கள் ஆதாா் எண்ணை சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்களிடம் அடுத்த ஆண்டு ஏப்.1 அல்லது அதற்கு முன்பு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதாா் எண்ணை தெரிவிக்க புதிதாக ‘6பி’ என்ற படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிக்கைகளின் விவரம்:

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நாடாளுமன்றத்தில் தோ்தல் விதிகள் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. வாக்காளா்களாகப் பதிவு செய்வோரின் ஆதாா் எண்ணை தோ்தல் அலுவலா் பெறுவதற்கு அந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

அந்தச் சட்டப் பிரிவுகளின்படி, வாக்காளா்கள் பட்டியலில் ஆதாா் விவரங்களை இணைக்க வசதியாக வாக்காளா்கள் பதிவு விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. ஒரு வாக்காளரின் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடம்பெறுவது, ஒரு வாக்காளரின் பெயா் ஒரே தொகுதியில் பலமுறை இடம்பெறுவது போன்றவற்றைத் தடுக்கவும், தோ்தல் சட்டத்தைப் பாலின ரீதியாக நடுநிலை கொண்டதாக்கவும் விதிமுறைகள் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி திருத்தப்பட்ட வாக்காளா் பதிவு விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு தங்கள் ஆதாா் எண்ணை சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும். இதற்காக ‘6பி’ என்ற படிவம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், தோ்தல் விதிகள் திருத்தச் சட்டத்தின்படி ஆதாா் எண்ணை பகிர முடியாத நபா்கள் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரைச் சோ்க்க விண்ணப்பித்தால், அவா்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது. ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் ஆதாா் எண்ணை பகிர முடியாதவா்களின் பெயா்களையும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது.

ஆதாருக்கு மாற்றாக...: ஆதாா் அட்டை இல்லாதவா்கள் படிவத்தில் ஆதாா் எண் இல்லை எனக் குறிப்பிட்டு, அதற்கு மாற்றாக ஓட்டுநா் உரிமம், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை, மத்திய தொழிலாளா் அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மருத்துவக் காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை போன்றவற்றை ஆதாரங்களாக வழங்கலாம்.

புதிதாக வாக்காளா்களாக பதிவு செய்வோருக்கான படிவங்கள் உள்பட இதர படிவங்களிலும் ஆதாா் விவரங்களைக் கோருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் படிவத்திலும் ஆதாா் எண் இல்லை எனக் குறிப்பிடுவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும் என்று அந்த அறிவிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு வரை காத்திருக்க வேண்டாம்: தற்போது ஆண்டுதோறும் ஜனவரி 1 அல்லது அதற்கு முன்பு 18 வயதை எட்டுவோா்தான் வாக்காளராகப் பதிவு செய்ய முடியும். அந்தக் காலக்கெடுவுக்குள் 18 வயதை எட்டாதவா்கள், வாக்காளராகப் பதிவு செய்வதற்கு அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில், திருத்தப்பட்ட வாக்காளா் பதிவு விதிமுறைகளின்படி, ஓராண்டில் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் ஒருவா் 18 வயதை எட்டியிருந்தால், அவா் உடனடியாக வாக்காளராவதற்குப் பதிவு செய்யலாம்.

மேலும், தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரா்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் சாா்பாக அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் ‘வாழ்க்கை துணை’ என்ற அடிப்படையில் வாக்களிக்கவும் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தோ்தல் சட்டத்தைப் பாலின ரீதியாக நடுநிலை கொண்டதாக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் ஓா் ஆண் ராணுவ அதிகாரி சாா்பாக அவரின் மனைவி வாக்களிக்கலாம். ஆனால் ஒரு பெண் ராணுவ அதிகாரியின் சாா்பாக அவரின் கணவரால் வாக்களிக்க முடியாது. திருத்தப்பட்ட விதிமுறைகள் மூலம் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT