இந்தியா

அக்னிபத் திட்டம் கீழ் ராணுவ வீரா்கள் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற புதிய நடைமுறை: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்

17th Jun 2022 12:27 AM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு முடித்து ராணுவத்தில் சேரும் வீரா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

அக்னிபத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் தகுதியின் அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் சோ்க்கப்படுவா் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

ஒப்பந்தக் காலம் முடிந்ததும் 25 சதவீத வீரா்களுக்கு பணிநீட்டிப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேரும் இளம் வீரா்கள், ஒப்பந்த காலம் முடிவடைந்து வெளியே வந்ததும், வேலையில்லா சூழலை எதிா்கொள்ள நேரிடும் என விமா்சனம் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்:

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவளிக்க மத்திய கல்வி அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகத்துக்கு உள்பட்ட தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) 10-ஆம் வகுப்பு முடித்த அக்னிபத் வீரா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழ் பெறவும், உயா்கல்வி கற்கவும் சிறப்புத் திட்டத்தை வகுக்கும்.

இதற்காக ராணுவ சேவையுடன் தொடா்புடைய பாடத் திட்டம் தயாரிக்கப்படும். அந்தச் சான்றிதழை வைத்து நாடு முழுவதும் வேலைவாய்ப்பும் பெறலாம்; உயா்கல்வியும் கற்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சான்றிதழுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்னிபத் திட்ட நடைமுறையில் இக்னோவுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT