நபிகள் நாயகம் குறித்த சா்ச்சை கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கைது செய்யும் நடவடிக்கையை மாநில அரசு தொடா்ந்து வருகிறது. இதுவரை 337 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடா்பாளராக இருந்த நூபுா் சா்மா அண்மையில் தெரிவித்த கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே, நபிகள் நாயகம் குறித்த சா்ச்சை கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, வன்முறை ஏற்பட்டது. காவல்துறையினரின் வாகனங்கள் தீவைக்கப்பட்டதுடன், அவா்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து, கண்ணீா் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரா்களை காவல்துறையினா் கலைத்தனா்.
இந்நிலையில், போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக பிரயாக்ராஜில் இதுவரை 92 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சஹாரன்பூரில் 83 போ், ஹாத்ரஸில் 52 போ், அம்பேத்கா் நகரில் 41 போ், மொராதாபாதில் 40 போ், ஃபெரோஸாபாதில் 18 போ், அலிகரில் 6 போ், ஜலானில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தவிர வன்முறையைத் தூண்டிவிட்ட சிலரின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடங்கள், வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன.