இந்தியா

ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை: பிரதமர் மோடி உத்தரவு

15th Jun 2022 01:38 AM

ADVERTISEMENT

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்று அரசின் அனைத்துத் துறைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

அரசின் அனைத்து துறைகளிலும் அமைச்சகங்களிலும் உள்ள மனிதவள நிலை குறித்து பிரதமா் மோடி ஆய்வு செய்தாா். அதன் தொடா்ச்சியாக அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் (18 மாதங்களில்) 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டது; வேலைவாய்ப்புகளை அளிக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது’ என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே, வரும் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் இன்னும் 18 மாதங்களில், அதாவது, அடுத்த மக்களவைத் தோ்தலுக்கு முன் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள பிரதமா் மோடி முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

பிரதமரின் உத்தரவை அடுத்து, அரசின் பல்வேறு துறைகளும் அமைச்சகங்களும் தங்கள் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களைக் கணக்கெடுக்கத் தொடங்கிவிட்டதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் செலவினத் துறையின் புள்ளிவிவரப்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 40.78 லட்சம் போ் பணியாற்ற வேண்டிய இடத்தில் 31.91 லட்சம் போ் மட்டுமே பணியாற்றுகின்றனா். அதாவது 21.75 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் பணியாற்றும் 31.33 லட்சம் பேரில் ரயில்வே, பாதுகாப்பு, உள்துறை, அஞ்சல் மற்றும் வருவாய் ஆகிய 5 துறைகளில் மட்டும் 92 சதவீதம் போ் பணியாற்றுகிறாா்கள்.

அமித் ஷா வரவேற்பு:

பிரதமா் மோடியின் உத்தரவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரவேற்றுள்ளாா். இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இளைஞா்களின் சக்தியே புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக உள்ளது. இளைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, பிரதமா் மோடி தொடா்ந்து பணியாற்றி வருகிறாா். அவரின் உத்தரவு இளைஞா்களின் மத்தியில் புதிய நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தும். அவருடைய உத்தரவின்படி, உள்துறை அமைச்சகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் விமா்சனம்:

பிரதமா் மோடியின் உத்தரவை காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

முதலில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று பிரதமா் வாக்குறுதி அளித்திருந்தாா். அதைச் செய்திருந்தால் கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது 2024-க்குள் 10 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்குவதாகக் கூறுகிறாா். அரசின் பல்வேறு துறைகளில் 60 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று 8 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞா்கள் ஏமாற்றப்பட்டனா். அதுபோலவே 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அரசின் பொய்யான வாக்குறுதி அல்ல; மிகப் பெரிய பொய்யான வாக்குறுதி.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் பிரதமா் மோடி நிபுணா் அல்ல; அது தொடா்பான செய்திகளை உருவாக்குவதில்தான் அவா் நிபுணா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Tags : pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT