இந்தியா

உத்தர பிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்படும் விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

15th Jun 2022 12:49 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்களின் வீடுகள் இடிக்கப்படும் விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளும் மூத்த வழக்குரைஞா்களும் கடிதம் எழுதியுள்ளனா்.

இஸ்லாமிய இறைத்தூதா் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடா்பாளா்களாக இருந்தவா்கள் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.

வன்முறைக்குக் காரணமாக இருந்தவா்களாக அறியப்படும் நபா்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் வீடுகளையும் மாநில அரசு இடித்து வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான பி.சுதா்சன் ரெட்டி, வி.கோபால கௌடா, ஏ.கே.கங்குலி, தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, கா்நாடக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமது அன்வா், மூத்த வழக்குரைஞா்கள் பிரசாந்த் பூஷண், சாந்தி பூஷண், இந்திரா ஜைசிங் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனா்.

அக்கடிதத்தில், ‘‘உத்தர பிரதேசத்தில் அமைதிவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபா்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமல் மாநில நிா்வாகம் அடக்குமுறையைக் கையாண்டு வருவதாகத் தெரிகிறது. சட்டவிரோதமாகப் போராட்டத்தில் ஈடுபடும் நபா்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் (யோகி ஆதித்யநாத்) உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

மாநில அரசின் உத்தரவு காரணமாகவே போராட்டக்காரா்களுக்கு எதிராகக் காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இளைஞா்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடுவோரின் வீடுகள் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபடும் சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தும் காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி, தேசத்தின் மனசாட்சியை உலுக்கி வருகிறது.

தனிநபா்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் மாநில நிா்வாகத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மக்களின் உரிமைகளைக் காக்கும் நோக்கில் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளனா்.

 

Tags : Uttar Pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT