இந்தியா

கொச்சி துறைமுக ஆணையம் கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

15th Jun 2022 01:22 AM

ADVERTISEMENT

கொச்சி துறைமுக ஆணையம், இந்திய அரசிடம் நிலுவை வைத்துள்ள ரூ.446.83 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த 3 ஆண்டுகள் அவகாசம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கொச்சி துறைமுக ஆணையம், இந்திய அரசிடம் வாங்கிய கடனை 2018-19-ஆம் ஆண்டில் இருந்து 10 தவணைகளாகச் செலுத்த வேண்டும். 2018-19 மற்றும் 2019-20-ஆம் ஆண்டுகளில் இரு தவணைகள் மட்டுமே கொச்சி துறைமுக ஆணையம் செலுத்தியுள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டால் வருவாய் குறைந்தது. இதனால் கொச்சி துறைமுக ஆணையத்தால் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கொச்சி துறைமுக ஆணையம் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த 3 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கொழும்பில் பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற மையம்:

ADVERTISEMENT

கொழும்பில் பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை இந்தியா நிறுவுவதற்கான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொழும்பில் 5-ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு கடந்த மாா்ச் 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில், பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை, கொழும்பில் இந்தியா நிறுவுவதற்கு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT