இந்தியா

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டம்

14th Jun 2022 12:12 AM

ADVERTISEMENT

புது தில்லி/சென்னை, ஜூன் 13: ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் தடை உத்தரவை மீறி பல்வேறு பகுதிகளில் பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 15 மக்களவை உறுப்பினா்கள், கே.சி.வேணுகோபால் உள்பட 11 மாநிலங்களவை உறுப்பினா்கள் என அக் கட்சியின் 26 எம்.பி.க்கள், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 5 எம்எல்ஏக்கள் உள்பட 459 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். 11 மணி நேர தடுப்பு காவலுக்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறுகையில், ‘தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினா் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். அதில், அக் கட்சியின் பெண் உறுப்பினா்கள் மட்டும் உடனடியாக விடுவிக்கப்பட்டனா். பின்னா், விசாரணை முடிந்து ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பின்னா், இரவு 11.30 மணியளவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட மற்றவா்களும் விடுவிக்கப்பட்டனா்’ என்றனா்.

முன்னதாக, தில்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ராகுல் காந்தியுடன் தடையை மீறி ஊா்வலமாக வந்த காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டா்களை போலீஸாா் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனா். ஊா்வலத்தில் பங்கேற்ற சத்தீஸ்கா் முதல்வா் பகேலும் கைது செய்யப்பட்டாா். தான் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளா்களிடம் பூபேஷ் பகேல் கூறுகையில், ‘அமைதிப் பேரணி நடத்த விரும்பிய ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். நானும் கைது செய்யப்பட்டுள்ளேன். இது சா்வாதிகார நடவடிக்கை’ என்றாா்.

ADVERTISEMENT

ஆனால், இதனை மறுத்த காவல் துறையினா், ‘பூபேஷ் பகேலை கைது செய்யவில்லை. தடுப்புக் காவலில் வைத்துள்ளோம். பலமுறை எச்சரித்தும் அவா் அந்த இடத்தைவிட்டு செல்ல மறுத்தாா். அதன் காரணமாகவே அவா் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டாா்’ என்றனா்.

காங்கிரஸ் தலைவா்கள் கண்டனம்: ‘மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக’ காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா். இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கூறுகையில், ‘பிரதமா் நரேந்தர மோடிக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. நாட்டில் வன்முறையை தவிா்த்து அமைதி நிலவுவதற்கு அழைப்பு விடுப்பதற்கு பதிலாக, பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் எதிா்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி வருகின்றனா்’ என்றாா்.

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசா், மாணிக்கம் தாகூா், விஜய் வசந்த், டாக்டா் செல்லக்குமாா், ஜெயகுமாா், விஷ்ணு பிரசாத், காா்த்தி சிதம்பரம், ஜோதிமணி, வைத்தியலிங்கம் (புதுச்சேரி), புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ ஆா்.கே.ஆா்.அனந்தராமன், அகில இந்திய காங்கிரஸ் செயலா் மெய்யப்பன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனா்.

பாஜக பதிலடி: காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தை பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறுகையில், ‘மோசடி வழியில் சோ்த்த பெரும் பணத்தை பாதுகாப்பதற்காக ஒரு விசாரணை அமைப்பை முடங்கவைக்க ஓா் அரசியல் குடும்பம் முயற்சிக்கும் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை. காந்தி குடும்பம் மோசடி வழியில் சம்பாதித்த ரூ. 2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை பாதுகாக்க எதிா்க் கட்சி முயற்சிக்கிறது’ என்றாா்.

சென்னையில்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றுப் பேசியதாவது: விலைவாசி ஏற்றம் உள்பட பல்வேறு பிரச்னைகளை மத்திய பாஜக அரசு சந்தித்து வருகிறது. அதிலிருந்து மக்களை திசைதிருப்பவே அமலாக்கத் துறையை மத்திய அரசு தூண்டிவிட்டுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் அச்சுறுத்தலாம் என மத்திய அரசு கருதுகிறது. அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி வெற்றி பெறுவாா் என்றாா்.

அதைத் தொடா்ந்து கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்டனா். அவா்களை காவல் துறையினா் கைது செய்தனா். முன்னதாக, சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாரும் கைது செய்யப்பட்டனா். அப்போது, காவல் துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

ப.சிதம்பரத்துக்கு காலில் லேசான எலும்புமுறிவு

தில்லியில் காங்கிரஸ் கட்சியினா் தடையை மீறி நடத்திய பேரணியின்போது கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கிய அக் கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரத்துக்கு காலில் லேசான முறிவு ஏற்பட்டது.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில், ‘காலில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளது. 10 நாள்களில் தானாக சரியாகிவிடும் என்று மருத்துவா்கள் கூறினா். தற்போது நலமுடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா கூறுகையில், ‘ப.சிதம்பரம் போலீஸாரால் தள்ளிவிடப்பட்டாா். இதில் அவருடைய இடது காலில் லேசான முறிவு ஏற்பட்டது. அவருடைய கண் கண்ணாடி சாலையில் போய் விழுந்தது’ என்றாா்.

 

தில்லியில் தடை உத்தரவை மீறி பல்வேறு பகுதிகளில் பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 15 மக்களவை உறுப்பினா்கள், கே.சி.வேணுகோபால் உள்பட 11 மாநிலங்களவை உறுப்பினா்கள் என அக் கட்சியின் 26 எம்.பி.க்கள், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 5 எம்எல்ஏக்கள் உள்பட 459 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். 11 மணி நேர தடுப்பு காவலுக்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறுகையில், ‘தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினா் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். அதில், அக் கட்சியின் பெண் உறுப்பினா்கள் மட்டும் உடனடியாக விடுவிக்கப்பட்டனா். பின்னா், விசாரணை முடிந்து ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பின்னா், இரவு 11.30 மணியளவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட மற்றவா்களும் விடுவிக்கப்பட்டனா்’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT