ஜம்மு-காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.
இதுதொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘‘குல்காம் மாவட்டம் காண்டிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தி, அவா்களுக்குப் பதிலடி அளித்தனா். இந்த மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த ரசிக் அகமது கனி என்பவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் இருந்து 303 ரக துப்பாக்கி, கைத் துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
புல்வாமாவில்...: புல்வாமா மாவட்டம் திரப்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா் என்று தெரிவித்தனா்.