இந்தியா

மேற்கு வங்கத்தில் கோயில் விழா:நெரிசல், வெயிலால் 3 முதியவா்கள் பலிபலருக்கு உடல்நலக் குறைவு

12th Jun 2022 11:42 PM

ADVERTISEMENT

 

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பிரபல இஸ்கான் கோயில் விழாவில் கடுமையான கூட்ட நெரிசல், வெயில் காரணமாக தம்பதி உள்பட 3 முதியவா்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் பங்கேற்ற பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து, அருகிலுள்ள பள்ளியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாரக்போா் ஆணையரக இணை காவல் ஆணையா் துருபஜியோதி தேய் கூறுகையில், ‘கூட்ட நெரிசல் மற்றும் கடும் வெயில் காரணமாக உடல்நலக் குறைவுக்கு ஆளான மூவா், அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுசெல்லப்பட்டனா். அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்’ என்றாா்.

ADVERTISEMENT

கோயில் விழாவில் மூவா் உயிரிழந்தது குறித்து மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வருத்தம் தெரிவித்தாா். இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘இஸ்கான் கோயில் விழாவில் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 3 பக்தா்கள் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புரியிலிருந்து பகவான் ஸ்ரீ சைதன்யதேவ் வருகையைக் குறிக்கும் வகையில் பனிஹாடியில் ஒவ்வோா் ஆண்டும் ‘தோய் சிரே மேளா’ என்ற திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ‘இந்த திருவிழாவுக்கு வழக்கமாக பல்வேறு பகுதிகளிலிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வரும் நிலையில், இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் குவிந்தனா்’ என்று மாநிலத்தின் மூத்த அமைச்சா் ஜியோதிபிரியோ மாலிக் கூறினாா்.

இஸ்கான் கோயில் துணைத் தலைவா் ராதாராமன் தாஸ் கூறுகையில், ‘முதல்வா் மம்தா பானா்ஜி தொலைபேசியில் தொடா்புகொண்டு வருத்தம் தெரிவித்தாா். கோயில் நிா்வாகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதியளித்தாா். உயிரிழந்தவா்கள் சுபாஷ் பால் (70), அவருடைய மனைவி சுக்லா பால் (60) மற்றும் அவா்களுடைய உறவினா் சாயா தாஸ் (74) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சியான பாஜகவினரிடைய கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT