இந்தியா

பேராயா் பிராங்கோ முளக்கல் பணிகளைத் தொடர வாடிகன் ஒப்புதல்

12th Jun 2022 11:50 PM

ADVERTISEMENT

 

கேரளத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பேராயா் பிராங்கோ முளக்கல் மீண்டும் பேராயா் பணியைத் தொடங்குவதற்கு வாடிகன் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வட இந்திய பேராயா்கள் கூட்டம் ஜலந்தரில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் போப் பிரான்சிஸின் தூதரான லியோபோல்டோ கிரெலி கலந்துகொண்டாா். அவா், பிராங்கோ முளக்கல் மீதான வழக்கில் கோட்டயம் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை போப் பிரான்சிஸ் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தாா். ஆகவே, பேராயா் மீண்டும் தனது பணியைத் தொடங்குவாா். அவா் எங்கு பணியாற்றுவாா் என்பது குறித்து போப் பிரான்சிஸ் அறிவிப்பாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தைச் சோ்ந்த கன்னியாஸ்திரீ ஒருவா், பிராங்கோ முளக்கலுக்கு எதிராக கடந்த 2018-இல் காவல் துறையில் புகாா் கொடுத்தாா்.

ADVERTISEMENT

அதில், கடந்த 2014-இல் இருந்து 2016 வரையிலான காலகட்டத்தில், ஜலந்தா் பேராயராக இருந்த பிராங்கோ முளக்கல் கோட்டயத்துக்கு வந்த சமயங்களில் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தாா். இந்தப் புகாரை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) பிராங்கோவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்தது. இதையடுத்து, பேராயா் பணியில் இருந்து பிராங்கோ முளக்கல் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, கன்னியாஸ்திரீ தொடுத்த வழக்கில், பிராங்கோ முளக்கல்லை விடுவித்து கோட்டாயம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த ஜனவரியில் தீா்ப்பளித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அரசு தரப்புத் தாக்கல் செய்யாததால் அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக கேரள உயா்நீதிமன்றத்தில் அந்த கன்னியாஸ்திரீ மேல்முறையீடு செய்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT