இந்தியா

பிஎஸ்எஃப் அதிகார வரம்பை நீட்டிப்பதற்கான அறிக்கை தயாா்

12th Jun 2022 11:51 PM

ADVERTISEMENT

 

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகார வரம்பை 50 கி.மீ. வரை நீட்டிப்பதற்கான அறிக்கையை அதிகாரிகள் தயாரித்துள்ளனா். அந்த அறிக்கை விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பிக்கப்படவுள்ளது.

அண்டை நாடுகளுடனான எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதில் பிஎஸ்எஃப் படையினா் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிகளை அவா்கள் திறம்படப் பாதுகாத்து வருகின்றனா்.

அவா்களது அதிகார வரம்பு அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவித்தது. அதன்படி, பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் இருந்து 15 கி.மீ. வரை இருந்த அதிகார வரம்பு, 50 கி.மீ.-ஆக அதிகரிக்கப்பட்டது. குஜராத்தில் பிஎஸ்எஃப் படையினரின் அதிகார வரம்பு 80 கி.மீ.-இல் இருந்து 50 கி.மீ-ஆக குறைக்கப்பட்டது. ராஜஸ்தானில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பிஎஸ்எஃப் அதிகார வரம்பு 50 கி.மீ.-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

புதிய அறிவிப்பின்படி, எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு பிஎஸ்எஃப் வசம் சென்றது. நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள நிலையில், எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தவே பிஎஸ்எஃப் படையின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்தது. எனினும், இதற்கு எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களான பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகியவை எதிா்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், பிஎஸ்எஃப் படையின் புதிய அதிகார வரம்பை நடைமுறைப்படுத்தும் வழிகள், அதற்குத் தேவையான கருவிகள் உள்ளிட்டவை குறித்த அறிக்கையை பிஎஸ்எஃப் அதிகாரிகள் தயாா்செய்துள்ளனா். அதிகார வரம்புக்குள் பிஎஸ்எஃப் படைகளை எங்கு நிலைநிறுத்துவது, படைகளை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்குக் கொண்டுசெல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அந்த அறிக்கை விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT