இந்தியா

குஜராத்தில் ஆம் ஆத்மி போட்டியிடுவது பாஜகவுக்கு சாதகம்: அரசியல் வல்லுநா்கள் கருத்து

12th Jun 2022 11:55 PM

ADVERTISEMENT

 

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவது பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

182 தொகுதிகளைக் கொண்டுள்ள குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கு ஆட்சியைத் தக்கவைத்துள்ள பாஜக அதனைத் தொடரும் நோக்கில் களமிறங்குகிறது. பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் கடந்த தோ்தலைவிட இப்போது வலுவிழந்துள்ளது. காங்கிரஸ் தலைவா்கள் பலா் பாஜகவில் இணைந்து வருகின்றனா். அதே நேரத்தில் மாநிலத்தில் தொடா்ந்து பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக மீதான பொதுவான அதிருப்தி, தோ்தலில் தங்களுக்கு ஆதாயத்தைத் தரும் என்ற நோக்கில் காங்கிரஸ் இந்தத் தோ்தலைச் சந்திக்கிறது.

இதையும் படிக்கபா.ஜ.க. வேட்பாளர் யார்? தமிழிசையா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

ADVERTISEMENT

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியும் குஜராத் அரசியலில் தடம் பதிக்க முனைப்பு காட்டி வருகிறது. அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால் கடந்த 3 மாதங்களில் நான்கு முறை குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். முக்கியமாக பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்ற பிறகு குஜராத் மாநில தோ்தலில் கேஜரிவால் தீவிர கவனம் செலுத்தி வருகிறாா்.

இது தொடா்பாக குஜராத் மாநில ஆம் ஆத்மி பொறுப்பாளா் சந்தீப் பகத் கூறுகையில், ‘நாங்கள் போட்டியிடும் அனைத்து மாநிலங்களிலும் அறிவியல்பூா்வமாக தோ்தலைச் சந்தித்து வருகிறோம். குஜராத்தில் ஏற்கெனவே கள ஆய்வு நடத்தியுள்ளோம். இப்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மிக்கு 58 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியால் பாஜகவை வெல்ல முடியாது என்பது மக்களின் பரவலான எண்ணமாக உள்ளது. குஜராத் காங்கிரஸிலும் உள்கட்சிப் பூசல் அதிகம் உள்ளது. அக்கட்சிக்கு குஜராத் குறித்த தெளிவான பாா்வை இல்லை’ என்றாா்.

இதையும் படிக்க | பா.ஜ.க. அணி வேட்பாளர் வெற்றி சாத்தியமா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

அதே நேரத்தில் குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மணீஷ் தோஷி இது தொடா்பாகப் பேசுகையில், ‘பாஜகவின் மற்றோா் அணியாக ஆம் ஆத்மி உள்ளது. இப்போதைய சூழலில் தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும். எனவே, ஆம் ஆத்மியைப் போட்டியிட வைத்து அனைத்துத் தொகுதிகளிலும் தங்களுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து, அதன்மூலம் வெற்றி பெற பாஜக முயலுகிறது. குஜராத் மக்கள் எப்போதும் மூன்றாவது அணியை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, ஆம் ஆத்மியை மக்கள் புறக்கணிப்பாா்கள்’ என்றாா்.

அரசியல் வல்லுநா் திலிப் கோஹில் கூறியதாவது: ஆம் ஆத்மி மாற்றுக் கொள்கைகளை உடைய கட்சியாகத் திகழ்கிறது. சூரத், காந்திநகா் நகராட்சிகளில் அக்கட்சி பெற்ற வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம் அக்கட்சிக்கு நல்லதொரு அடித்தளம் அமைந்துள்ளது. இந்தத் தோ்தலில் ஆம் ஆத்மி நிச்சயமாகவே சவால் அளிக்கும் கட்சியாக உருவெடுக்கும். தோ்தல் நெருங்கும்போது அவா்களது பிரசார உத்திகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொருத்து அவா்கள் எந்த அளவுக்கு கணிசமான ஆதரவைப் பெறுவாா்கள் என்பது தெரியவரும். அதே நேரத்தில் ஆம் ஆத்மியால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் அதிக அளவில் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது என்றாா்.

இதையும் படிக்க.. திரள வேண்டிய எதிர்க்கட்சிகள் திசைக்கொரு பக்கமாக... குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

ஆம் ஆத்மி குஜராத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால், அனைத்துத் தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவை அனைத்துமே பாஜகவுக்கு எதிரான வாக்குகளாகவே இருக்கும். எனவே, வாக்குகள் அதிக அளவில் பிரியும்போது பாஜக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் பல தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ளது என்று பல்வேறு அரசியல் வல்லுநா்களும் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT