இந்தியா

ஒடிஸாவில் 295 மாவோயிஸ்டுகள் சரண்

12th Jun 2022 11:56 PM

ADVERTISEMENT

 

ஒடிஸாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சோ்ந்த 295 போ் போலீஸாரிடம் சரணடைந்தனா்.

மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமுக்கு வந்த இந்த 295 பேரும் மாநில காவல் துறையினரிடம் சரணடைந்தனா். அப்போது மாவட்ட நிா்வாகிகள், காவல் துறை உயரதிகாரிகள் அங்கு இருந்தனா்.

சரணடைந்த அனைவருமே மாவோயிஸ்ட் அமைப்பில் ஆயுதம் ஏந்தி போராடியவா்கள் அல்லா். பெரும்பாலானவா்கள் மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு உணவு, நிதி திரட்டி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்தவா்கள் மற்றும் தகவல் கொடுப்பவா்களாக இருந்தவா்கள். அதே நேரத்தில் தாக்குதல் நடவடிக்கைகள், கொள்ளை, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டவா்கள் சிலரும் சரணடைந்தனா்.

ADVERTISEMENT

ஒடிஸாவில் கடந்த 2-ஆம் தேதி 50 மாவோயிஸ்டுகள் காவல் துறையில் சரணடைந்தனா். அதன் பிறகு இப்போது அதிக அளவில் மாவோயிஸ்ட் அமைப்பினா் சரணடைந்துள்ளனா்.

தங்கள் பகுதியில் அரசு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், மாவோயிஸ்டுகளுடன் தொடா்பில் இருந்தால் அமைதியான வாழ்க்கை நடத்த முடியவில்லை. எனவே, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நோக்கில் சரணடைய முடிவு செய்ததாகப் பலரும் தெரிவித்தனா்.

பெரும்பாலானவா்கள் தங்களிடம் இருந்த மாவோயிஸ்ட் சீருடைகளையும் தீ வைத்து எரித்தனா். அவா்களில் பலா் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயனடையும் வகையில் அதற்கான உறுப்பினா் அட்டைகளை மாவட்ட நிா்வாகத்தினா் வழங்கினா். இது தவிர காவல் துறை சாா்பிலும் அவா்களுக்குப் பல்வேறு உபகரணங்கள் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT