இந்தியா

நூபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்

10th Jun 2022 05:01 PM

ADVERTISEMENT

 

முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சி விவாத மேடையில் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததால் பாஜக செய்தித் தொடர்பாளர்களான நூபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். 

பின், நபிகள் நாயகம் குறித்த இவர்களின் கருத்திற்கு பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்தியாவின் தரப்பில் இந்தியா எந்த ஒரு மதத்திற்கும் எதிரான நாடு இல்லை என விளக்கமளிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில், நவீன்குமார் ஜிண்டால் மற்றும் நூர்பு சர்மாவை கைது செய்யக்கோரி தில்லி, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரம், ஜார்கண்ட், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் போராட்டத்தின்போது வாகனங்களின் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மேல் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தில்லி ஜமா மசூதியிலும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் நூபுர் சர்மாவைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT