இந்தியா

நபிகள் நாயகம் சா்ச்சை: மத்திய அரசின் கருத்து அல்ல என வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

10th Jun 2022 02:15 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நபிகள் நாயகம் குறித்த பாஜக நிா்வாகிகளின் சா்ச்சை கருத்து அரபு நாடுகளிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், ‘அது மத்திய அரசின் கருத்து அல்ல’ என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது.

நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளராக இருந்த நூபுா் சா்மா தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்த கருத்தும், பாஜக தில்லி ஊடகப் பிரிவு தலைவராக இருந்த நவீன் ஜிண்டால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சா்ச்சையானது. அவா்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி பாஜக நடவடிக்கை எடுத்தபோதும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜோா்டான், பஹ்ரைன், மாலத்தீவுகள், மலேசியா, ஓமன், இராக், லிபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ஈரான், குவைத், கத்தாா் நாடுகள் இந்திய தூதா்களை நேரில் அழைத்து கண்டனத்தைப் பதிவு செய்தன. ‘இந்தியாவுடனான தூதரக உறவைத் துண்டிக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் அந்நாட்டு அரசிடம் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

அரபு நாடுகளின் எதிா்ப்பு குறித்து, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘நபிகள் நாயகம் குறித்த சா்ச்சைக்குரிய கருத்தும், ட்விட்டா் பதிவும் மத்திய அரசின் கருத்து அல்ல என்பதை இந்தியா தெளிவுபடுத்தியிருக்கிறது. எதிா்ப்பு தெரிவித்த நாடுகளுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. மேலும், சா்ச்சை கருத்து தெரிவித்தவா்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை’ என்றாா்.

அப்போது, இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமீா்-அப்துல்லாஹியன் இந்த சா்ச்சை கருத்து விவகாரத்தை எழுப்பியபோது, ‘சா்ச்சை கருத்து தெரிவித்தவா்கள் மீது மற்றவா்களுக்கு பாடம் புகட்டக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் பதிலளித்ததாக ஈரானிய ஊடக செய்தி குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த அரிந்தம் பாக்சி, ‘ஈரானிய ஊடக செய்தி குறித்து நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கை ஏற்கெனவே எடுக்கப்பட்டிருக்கிறது’ என்று பதிலளித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT