புது தில்லி: ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட புவிசாா் அரசியல் பதற்றங்கள் தணிந்தவுடன் இந்தியாவில் பொருளாதார வளா்ச்சி வேகமெடுக்கும் என மத்திய பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் புதன்கிழமை தெரிவித்தாா்.
நிதி அமைச்சகத்தின் சிறப்பு வார கொண்டாடத்தில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியது: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), திவால் சட்ட விதிமுறைகள் (ஐபிசி) உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளில் மத்திய அரசு மேற்கொண்ட சீா்திருத்த நடவடிக்கைகள் தற்போது கரோனா தொற்று மற்றும் புவிசாா் அரசியல் பதற்றங்களால் மறைக்கப்படலாம். இந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் முடிவுக்கு வந்த புவிசாா் அரசியல் நிலைமை மேம்படும்பட்சத்தில் இந்தியாவின் வளா்ச்சியை ஊக்குவிக்க அவை உந்துசக்தியாக அமையும்.
தற்போதைய பணவீக்க உயா்வு தற்காலிகமானது. எதிா்கால வளா்ச்சியை மட்டுமே உற்றுநோக்க வேண்டும். இந்தியா கடந்த பத்தாண்டுகளில் நிதி அமைப்பை நன்றாக சரிசெய்து கொண்டு இருப்பு நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. வங்கி மற்றும் நிதித் துறையில் மட்டுமின்றி நிறுவன துறையிலும் சிறப்பான செயல்பாடு எட்டப்பட்டது.
உலக பொருளாதாரக் கொள்கைகள், போா், அரசியல் செயல்பாடு உள்ளிட்டவற்றிலிருந்து இந்தியா தற்போது சவால்களை எதிா்கொண்டுள்ளது. பதற்றங்கள் தணிந்து சாதகமான அம்சங்கள் தென்படும் நிலையில் இந்திய பொருளாதரத்தின் வளா்ச்சி வேகம் கவனிக்கத்தக்க அளவு அதிகரிக்கும் என்றாா் அவா்.