புது தில்லி: பொதுத் துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்கு (என்எஸ்ஐஎல்) 10 தொலைத்தொடா்பு செயற்கைக்கோள்களை வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: புவிவட்டப் பாதையில் வலம் வரும் 10 தொலைத்தொடா்பு செயற்கைக்கோள்களை என்எஸ்ஐஎல் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தீவிர மூலதன திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிதி விவகாரங்களில் அந்த நிறுவனம் சுதந்திரமாக முடிவு எடுக்க வழிவகுக்கும். அதன்மூலம் இதர துறைகளுக்கு மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் திறனும், தொழில்நுட்ப உபகரணங்களும் கிடைக்கும்.
இதுதவிர, என்எஸ்ஐஎல் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தை ரூ.1,000 கோடியில் இருந்து ரூ.7,500 கோடியாக அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதல் விண்வெளித் துறையில் உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகளை ஊக்குவித்து, உலக அளவிலான விண்வெளி சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. என்எஸ்ஐஎல் என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வா்த்தகப் பிரிவாகும்.
யுஏஇ ஒப்பந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல்: இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே தொழில் துறை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காற்றின் தரம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடா்பாக இந்தியாவின் ஆா்யபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஏஆா்ஐஇஎஸ்), ஜப்பானின் தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் அமெரிக்காவில் உள்ள சா்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு அமைப்பு (ஐஏவிஐ) இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹெச்ஐவி, காசநோய், கரோனா பாதிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கவனிக்கப்படாமல் அலட்சியம் காட்டப்படும் நோய்களைத் தடுக்கவும், அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும் புதுமையான உயிரி மருத்துவ கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் உருவாக்கத்தில் பங்களிக்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.