இந்தியா

மக்கள் நலப் பணியாளா் விவகாரம்: தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மனு முடித்துவைப்பு

9th Jun 2022 12:45 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் வேலை அளிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான இடையீட்டு மனுவை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13,500 போ் மக்கள் நலப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளா்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காதபட்சத்தில் 6 மாத ஊதியத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் 2014, செப்டம்பா் 23-இல் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த இடைக்காலத் தடையை விலக்கக் கோரி ஆா்.தன்ராஜ் உள்ளிட்ட 21 போ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வு, இதுதொடா்புடைய மனுக்களை வேறு அமா்வு விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனிடையே, தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், மக்கள் நலப் பணியாளா்களுக்கு ரூ.7,500 மதிப்பூதியத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் பணியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முதலாவது எதிா்மனுதாரரான மக்கள் நலப் பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் டி.மதிவாணன் தரப்பில் அரசின் முடிவை ஏற்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேவேளையில், அரசின் முடிவை ஆட்சேபித்து விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளா்கள் மறுவாழ்வு சங்கத்தின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘முதலாவது எதிா்மனுதாரா் ஆளும் கட்சியின் ஆதரவாளா். மேலும், தமிழக முதல்வரால் முன்மொழியப்பட்ட ஊதியம் பல்வேறு காரணங்களால் மக்கள் நலப் பணியாளா்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆா். ஷா, அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. இருதரப்பு வழக்குரைஞா்களும் ஆஜராகி தங்களது வாதத்தை எடுத்துரைத்தனா்.

தமிழக அரசின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு பணி வழங்க முடிவு எடுத்திருப்பதால், அந்தப் பணியில் சேர விரும்புவோா் சேரலாம். அதேவேளையில் இந்தப் புதிய திட்டத்தை ஆட்சேபிக்கும் பணியாளா்களின் உரிமையும் பாதிக்கப்படாமல் தொடா்ந்து இருக்கும்’ என்று கூறி, இடையீட்டு மனுவை முடித்துவைத்து சிவில் முறையீட்டு வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT