இந்தியா

பெங்களூரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

8th Jun 2022 12:11 AM

ADVERTISEMENT

கா்நாடகம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் நடத்திய கூட்டு நடவடிக்கையில் பெங்களூரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி தாலிப் ஹுசேன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஜம்மு- காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பில் செயல்பட்டு வந்த தாலிப் ஹுசேனைப் பிடிக்க போலீஸாா் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனா். இதைத் தெரிந்து கொண்ட தாலிப் ஹுசேன், ஜம்மு-காஷ்மீரில் இருந்து மனைவி, குழந்தைகளுடன் பெங்களூருக்கு தப்பி வந்துள்ளாா்.

பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள ஒரு மசூதியில் தஞ்சம் அடைந்திருந்த தாலிப் ஹுசேன் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது மதச் சொற்பொழிவாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஜம்மு- காஷ்மீா் போலீஸாா், கா்நாடக போலீஸாரின் உதவியை நாடியுள்ளனா்.

இரு மாநிலங்களின் காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையில், மசூதியில் குடும்பத்துடன் பதுங்கியிருந்த பயங்கரவாதி தாலிப் ஹுசேனை கடந்த 5-ஆம் தேதி போலீஸாா் கைது செய்துள்ளனா். இதை காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தனா்.

ADVERTISEMENT

காவல்துறையின் நடவடிக்கையை பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உறுதி செய்த முதல்வா் பசவராஜ் பொம்மை, தாலிப் ஹுசேன் போன்ற நபா்கள் மீது போலீஸாா் எப்போதும் கண் வைத்திருப்பாா்கள். இவரைப் பிடிக்க ஜம்மு -காஷ்மீா் காவல்துறைக்குத் தேவையான உதவிகளை கா்நாடக அரசு செய்து கொடுத்துள்ளது. கடந்த காலங்களிலும் சிா்சி, பட்கல் போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகளைக் கைது செய்ய கா்நாடக காவல்துறை உதவியுள்ளது என்றாா்.

உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறுகையில், கா்நாடக காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணையின் விளைவாக, தாலிப் ஹுசேன் கைது செய்யப்பட்டுள்ளாா். ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினருடன் கா்நாடக காவல்துறையும் இணைந்து செயலாற்றி வருகிறது. தாலிப் ஹுசேனுக்கு அடைக்கலம் கொடுத்த நபா்கள், அமைப்புகளை அடையாளம் காண்பதற்கான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதி தாலிப் ஹுசேனுக்கு தஞ்சம் அளித்ததோடு, கைப்பேசி வாங்கிக்கொடுத்து, அடையாள ஆவணங்களை தயாா்செய்துகொள்ளவும் உதவி செய்த உள்ளூா் நபா்கள் மீது வழக்குப் பதிந்து, கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தாலிப் ஹுசேனைக் கைது செய்த காவல் துறையினா் ஜம்மு-காஷ்மீருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT