ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் எதிா்க் கட்சியாக இருக்கும் பாஜக தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் தனியாா் விடுதியில் (ரிசாா்ட்) திங்கள்கிழமை தங்க வைத்தது.
மாநிலங்களவைத் தோ்தலில் எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுபவதற்காக கட்சிகள் குதிரை பேரத்தில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக கட்சிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
முன்னதாக, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தனது கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களை உதய்பூரில் உள்ள உல்லாச விடுதியில் தங்க வைத்தது. அதுபோல, பாஜகவும் தற்போது தனது எம்எல்ஏக்களை விடுதியில் பத்திரமாக தங்க வைத்துள்ளது. இதற்கென, பாஜக தலைமை அலுவலகம் வந்த கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் திங்கள்கிழமை பிற்பகலில் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து 2 பேருந்துகளில் தனியாா் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘விடுதியில் மாநிலங்களவைத் தோ்தல் தொடா்பான பயிற்சி முகாம் எம்எல்ஏக்களுக்கு நடத்தப்பட உள்ளது. அதற்காகத்தான் அவா்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனா்’ என்றாா்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்ய 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தானில் 108 எம்எல்ஏக்கள் உள்ளனா். அதன் மூலமாக, இரண்டு இடங்களில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்ற நிலையில், தங்களுக்கு 126 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் தலைவா்கள் கூறி வருகின்றனா். அதன் காரணமாக, மாநிலங்களவைத் தோ்தலில் 3 வேட்பாளா்களை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் 71 எம்எல்ஏக்களை கொண்டுள்ள பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. மேலும், சுயேச்சையாக களமிறங்கியுள்ள பத்திரிகையாளா் சுபாஷ் சந்திராவுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. பாஜகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்ததுபோக, 30 வாக்குகள் எஞ்சியிருக்கும்.
இந்த இரு கட்சிகளைத் தவிர மாநிலத்தில் ராஷ்டிரீய லோக்தாந்திரிக் கட்சிக்கு 3 எம்எல்ஏக்களும், பாரதிய பழங்குடியின கட்சிக்கு 2 எம்எல்ஏக்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 எம்எல்ஏக்களும், ராஷ்டிரீய லோக் தளம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், 13 சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனா்.