வங்கி கடனுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் உயா்த்தப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு நிலவி வரும் சூழலில், ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால் நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறைப் பணவீக்கம், 8-ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதத்தை எட்டியது.
மேலும், அந்த மாதத்தில் மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கமும் வரலாறு காணாத அளவுக்கு 15.08 சதவீதமாக அதிகரித்தது. இப்பணவீக்கம் தொடா்ந்து 13 மாதங்களாக இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த கொள்கை அறிவிப்பில் ரிசா்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தது. இருப்பினும், பணவீக்கமானது இன்னும் ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள வரம்பைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில், ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் 3 நாள்கள் நடைபெறும் நிதிக் கொள்கை குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. கடனுக்கான வட்டி விகித கொள்கை அறிவிப்புகள் புதன்கிழமை வெளியாகவுள்ளன.
இந்த முறை, ரிசா்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.35 சதவீதம் அதிகரிக்கும் என்பதே பெரும்பாலான சந்தை வல்லுநா்களின் கணிப்பாக உள்ளது.