இந்தியா

நோரோ வைரஸ் பாதிப்பு: கேரளத்திடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

7th Jun 2022 03:50 AM

ADVERTISEMENT

கேரளத்தில் இருவருக்கு நோரோ வைரஸ் தொற்று பாதித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அம்மாநில கண்காணிப்பு அலுவலகத்தை மத்திய சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
 நோரோ வைரஸ் என்பது உலக அளவில் பரவி வரும் வயிறு தொடர்புடைய தொற்றாகும். வாந்தி, பேதி உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும். குடல் எரிச்சல், சத்துணவுக் குறைபாடு போன்றவையும் இந்தத் தொற்றால் ஏற்படுகின்றன.
 உலக அளவில் ஆண்டுதோறும் 68.5 கோடி பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20 கோடி பேர் குழந்தைகளாவர்.
 கேரளத்தில் முதன்முதலாக நோரோவைரஸ் பாதிப்பு ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கண்டறியப்பட்டது. அப்போது ஆலப்புழா நகராட்சியிலும அதன் அருகில் உள்ள ஊராட்சிகளிலும் 950 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. இத்தொற்றின் பாதிப்பு சுமார் ஒன்றரை மாதத்துக்கு நீடித்தது.
 இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில் "தற்போது இத்தொற்று வேகமாகப் பரவி வரும் போதிலும் இந்த நோய் தானாகவே கட்டுக்குள் வரக்கூடியதாகும். இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 92 சதவீதம் பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். ஆலப்புழாவில் இத்தொற்று பரவியதற்குக் காரணம் மாசடைந்த குடிநீர் என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகளில் இருவருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேரள கண்காணிப்பு அலுவலகத்தை மத்திய அரசு கோரியுள்ளது. அந்த அறிக்கை விரைவில் அனுப்பி வைக்கப்படும்' என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT