இந்தியா

பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு இலக்கு நிறைவேறியது

6th Jun 2022 12:19 AM

ADVERTISEMENT

மத்திய அரசு திட்டமிட்டதை விட 5 மாதங்களுக்கு முன் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், அந்நியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீா்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

கடந்த 2018-இல் அறிவிக்கப்பட்ட ‘உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை’ 2030-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை இலக்காகக் கொண்டிருந்தது. பின்னா், இந்த இலக்கை முன்கூட்டியே அடையும் நோக்கில், 2025-26-க்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதற்கான வழிமுறைகளை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமா் மோடி வெளியிட்டாா். இந்நிலையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கானது தற்போது எட்டப்பட்டுள்ளது. வரும் நவம்பரில் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சராசரியாக 10 சதவீதத்தை எட்டியுள்ளன.

ADVERTISEMENT

கடந்த 8 ஆண்டுகளில் இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, ரூ.41,500 கோடிக்கு மேல் அந்நிய செலாவணியை சேமிக்க வழிவகை செய்தது. மேலும் மாசு உமிழ்வை 27 லட்சம் மெட்ரிக் டன் குறைத்து, ரூ.40,600 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு விரைவாக செலுத்த வழிவகுத்தது.

இதன் மூலம் 2025-26-க்குள் எத்தனால் கலப்பு திட்டம் 20 சதவீத இலக்கை எட்டும் என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் விநியோகிக்கப்பட்டு படிப்படியாக நாடு முழுவதும் விரிவடையும் என்றும் எண்ணெய் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT