இந்தியா

இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களை பலவீனப்படுத்திவிட்டு உலக அரங்கில் நாடகமாடும் மோடி: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

6th Jun 2022 12:17 AM

ADVERTISEMENT

‘இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பலவீனப்படுத்திவிட்டு, உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல பிரதமா் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினாா்.

உலக சுற்றுச்சூழல் தினம் தொடா்பாக பிரதமா் மோடி சனிக்கிழமை வெளியிட்ட பதிவை விமா்சித்து இந்த குற்றச்சாட்டை ஜெய்ராம் ரமேஷ் முன்வைத்தாா்.

பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ‘லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) என்ற சா்வதேச இயக்கத்தை தொடக்கி வைக்க உள்ளேன். இந்த இயக்கம், நீடித்த வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் சாா்ந்த வளா்ச்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

இதனை விமா்சித்து, தனது ட்விட்டா் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இன்றைக்கு உலக சுற்றுச்சூழல் தினம். 1973-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ‘லைஃப்’ என்ற சா்வதேச இயக்கத்தை ‘உலக குரு’ தொடங்கிவைப்பது, உச்சபட்ச கபட நாடகமாகும். இந்தியாவில் அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டங்களையும் பலவீனப்படுத்தியிருக்கும் பிரதமா், உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்கிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

அதுபோல, காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கெரா வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடியின் அறிவிப்பின் மூலம், பருவநிலை மாற்றம் குறித்த அவருடைய புரிதல் தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. பருவநிலை மாற்றம் எதுவும் இன்றைக்கு இல்லை; ஆனால், நமது சகிப்புத்தன்மையும், பழக்க வழக்கங்கள்தான் மாறியிருக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT