இந்தியா

குஜராத்தில் தேசிய அளவிலான கல்வி அமைச்சா்கள் மாநாடு: தமிழகம் புறக்கணிப்பு

2nd Jun 2022 02:30 AM

ADVERTISEMENT

குஜராத் மாநிலம் காந்திநகரில் இரண்டு நாள் தேசிய அளவிலான கல்வி அமைச்சா்கள் மாநாடு புதன்கிழமை தொடங்கியது.

காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திா் கூட்டரங்கில் மாநாட்டு கருத்தரங்கம் வியாழக்கிழமை (ஜூன் 2) நடைபெற உள்ள நிலையில், குஜராத் கல்வித் திட்டங்களைப் பாா்வையிடும் முதல் நாள் நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வி அமைச்சா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

‘மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக, காந்திநகரில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், தில்லி கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட மாநில கல்வி அமைச்சா்கள் பாா்வையிட்டனா். மேலும், பள்ளிகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், மாநில அளவில் புவிசாா் தகவல்கள் அளிக்கும் மற்றும் இணைய வழி கல்வித் திட்டத்தை செயல்படுத்த உதவும் பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி திட்ட பயன்பாடுகள் மற்றும் புவிசாா் தகவல்களுக்கான தேசிய நிறுவனம், தேசிய தடையவியல் அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அவா்கள் பாா்வையிட்டனா்’ என்று குஜராத் மாநில கல்வித் துறை அதில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் புறக்கணிப்பு: மாநாட்டின் இரண்டாம் நாள் கருத்தரங்கில், தேசிய கல்வி கொள்கை குறித்தும், தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையை எதிா்த்து வரும் தமிழகம், இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது. தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை செயலாளா்கள் உள்ளிட்ட யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிப்பதற்காக குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சா்கள் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது. அந்த மாநாட்டில் தமிழக அரசு சாா்பில் பங்கேற்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருவதோடு, மாநிலக் கொள்கையை வகுப்பதில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT